ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Sunday, April 12, 2009

வைகோ சரண்டர் பின்னணி… வன்னியிலிருந்து வந்த கட்டளை!



நண்பர்களே இந்த கட்டுரை அல்லது செய்தி ஜூனியர் விகடனில் வந்தது : இதில் நமக்கு பல மாற்றுக்கருத்து உண்டு இருந்தாலும் உங்களின் பார்வைக்கு வைக்கிறோம். பல பேர் இதை படித்திருக்கலாம் .

நட்புடன்
தோழர்

vaiko-order-from-vanni

”முறிந்தது கூட்டணி… வைகோ வழி, தனி வழி!” என்று ம.தி.மு.க. வட்டாரமே முடிவுக்கு வந்திருக்க… ஏப்ரல் எட்டாம் தேதி மாலை தொடங்கி, ஒன்பதாம் தேதி விடியலுக்குள் மளமளவென சில நிகழ்வுகளால் உரசல்கள் ஒட்டப்பட்டு… மறுபடி ‘ஃபெவிகால்’ கூட்டணியானது!
‘இரண்டு தொகுதிகள் தருகிறோம்’ என்று ஆரம்பித்த பேரம்தான் நான்கில் முடிந்திருக்கிறது. ”உண்மையில் நான்கு தொகுதிகளை ஏற்றுக்கொள்ளும் மூடுக்கு ஏழாம் தேதி மாலையே வந்துவிட்டார் வைகோ.

ஆனால், விருதுநகர், தஞ்சை, மத்திய சென்னை, நீலகிரி என்று ஜெ. தருவதாகச் சொன்ன தொகுதிகளில் விருதுநகர் போக மூன்றுமே வைகோவைக் கசப்படைய வைத்தது. அதுதான்
பேச்சுவார்த்தையையும் இழுத்தது. தா.பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் இதில் தலையிட்டு… ‘வைகோவை இழப்பது கூட்டணிக்கு நல்லதல்ல’ என்று சொன்னதைத் தொடர்ந்தே மத்திய சென்னை வாபஸ் பெறப்பட்டு, வைகோ விரும்பிய ஈரோடு தரப்பட்டது.

அப்போதும் சமாதானம் அடையாத வைகோவை மாற்றியது, வன்னிக் காட்டிலிருந்து அவருக்கு வந்த அன்புக் கட்டளைதான்!” என்று விவரம் சொல்கிறார்கள் ‘தாயக’ தம்பிகள்!

ஜெயிலுக்கு நேரமாச்சு..!

ஏப்ரல் எட்டாம் தேதி இரவு வைகோவுக்கு ஒரு புதிரான இரவாகத்தான் இருந்தது.

சென்னை அண்ணாநகர் வீட்டில் இருந்த வைகோ, போனும் கையுமாகத்தான் இருந்தார்.

தொகுதிப் பங்கீடு முடிவாகாத நிலையில், மறுநாள் காலை பொதுக்குழுவைக் கூட்ட விருந்ததே காரணம்.

தேர்தலில் தனித்துப் போட்டி என்பதை அறிவித்து, அதற்கான வியூகங்களைக் கூட்டிக் கழித்துப் பார்க்கத் தொடங்கியிருந்தாராம் வைகோ.

அவருடைய மனஓட்டம் தெரிந்து, டெல்லியிலிருந்து பி.ஜே.பி-யின் மூத்த தலைவர்கள் சிலரும் தொடர்புகொள்ள ஆரம்பித்தார்கள். பி.ஜே.பி., ம.தி.மு.க., சரத்குமார், கார்த்திக், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி என்று ஒரு புதுக் கூட்டணிக்கான ஃபார்முலா அந்த இரவில் போடப்பட்டு, வைகோவிடம் தெரிவிக்கப்பட்டதாம்!

‘பொதுக்குழுவுக்குப் பிறகு என் முடிவைச் சொல்கிறேன்’ என்று பிடிகொடுக்காமலே பேசியிருக்கிறார் வைகோ.

இதற்குள், ‘இலங்கைக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நீங்கள் பேசிவிட்டு வந்த பேச்சுகளுக்காக உங்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தாலும் பாயலாம்’ என்று காக்கித்துறை நண்பர்கள் சிலர் ‘அலர்ட்’ செய்ய… தேர்தல் நடக்கும்போது தான் சிறையில் இருக்கவும் நேரலாம் என்று யோசித்த வைகோ… உடனடியாக சில முடிவுகளை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை உணர்ந்தாராம்.

அதிகாலை வந்த ஓலை!

அதைத் தொடர்ந்து, ‘தேர்தல் நேரத்தில் இலங்கைப் பிரச்னை குறித்து ஒலிக்காத வண்ணம், வைகோவை கைது செய்துவிட திட்டம் தயாராகிறது.

அதற்காகவே அவரது பேச்சு குறித்த லீகல் ஒப்பீனியனை அரசு வழக்கறிஞர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்!’ என்று ஒரு தகவலை இங்கிருந்து கடல்கடந்து அனுப்பி வைத்தார்களாம் இலங்கைத் தமிழ்ப் போராட்ட ஆதரவாளர்கள் சிலர்.

அதன் விளைவாகத்தான் வன்னி காட்டுப் பகுதியிலிருந்து அவருக்கு ஒன்பதாம் தேதி அதிகாலையில் ஓர் அன்புக் கட்டளை வந்ததாகச் சொல்லப்படுகிறது!

‘முப்பத்தேழு விடுதலைப் புலிகளை உங்கள் வீட்டில் வைத்து சிகிச்சை அளித்ததற்காக உங்கள் தம்பி ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டார்.

ஈழப் பிரச்னைக்காக ஒன்றே முக்கால் வருடம் சிறையில் இருந்தீர்கள்.

அதற்கெல்லாம் ஒரு அர்த்தம் கிடைக்கவேண்டிய நேரம் இது.
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டுமே, இந்தியாவிடமிருந்து அடுத்தகட்ட உதவிகளை எதிர்பார்க்க முடியும் என்ற நிலையில் நாங்கள் இருக்கிறோம்.
அந்தக் கூட்டணியின் எதிர்ப்பு ஓட்டுகள் சிதறிப்போவதற்கு நீங்களும் ஒரு காரணமாக இருந்துவிடக்கூடாது.

அ.தி.மு.க. என்பது எங்களுக்கு ஆதரவான கட்சியல்ல… என்றாலும், அரசியல்ரீதியாக அதுதான் இன்று தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான முக்கியக் கட்சி! நீங்கள் அங்கே இருப்பதுதான் சரி…’ என்று உருக்கத்தோடு இருந்ததாம் அந்த வன்னிக் காட்டுக் கட்டளை!

இதுகுறித்து வைகோவுக்கு நெருக்கமான சிலர், ”தன் கட்சியைக் கரைக்கப் பார்க்கும் தி.மு.க. மீது கடும் கோபத்தில் இருந்த வைகோ, தனக்குப் பிரியமானவர்கள் இட்ட கட்டளையைக் கேட்டு பளிச்சென்று தெளிவாகிவிட்டார்.
கேட்ட தொகுதிகள் அத்தனையும் கிடைக்காமல் போனாலும்… தன் கொள்கைக்கான அரசியல் தீர்வு கிடைத்தால் போதுமென்று முடிவெடுத்தார்! விடிந்தும் விடியாத பொழுதில், அ.தி.மு.க. தரப்புக்குப் போன் போட்டுப் பேசினார்.

மளமளவென்று தொகுதி உடன்பாட்டுக் கடிதம் தயாராகி வந்தது.

அவரும் கையெªழுத்துப் போட்டு அனுப்பிவிட்டு… தெளிவான மனதோடு பொதுக்குழுவுக்குக் கிளம்பிப் போனார்…” என்கிறார்கள்.

தான் கைதாகலாம் என்ற சிந்தனை அவருக்குள் சுழன்றுகொண்டே இருக்க… ‘கொள்கைகளை நாடெங்கும் கொண்டுபோக வசதியாக நமக்கென ஒரு சேனல் தொடங்கப்படும்’ என்று பொதுக்குழுவின் ஆரம்பித்திலேயே அறிவித்தார் வைகோ.

அடுத்து தொகுதியின் பெயர்களைச் சொல்லுகையில், கடைசியாக விருதுநகர் பெயரை நிறுத்தி நிதானமாகக் கூற… அதுதான் வைகோ போட்டியிடும் தொகுதி என்று புரிந்து, பொதுக்குழு மண்டபத்தில் கைதட்டல் அடங்க வெகுநேரமானதாம்.

புலி வேட்டை…

இலங்கைத் தமிழர் பிரச்னையை இங்கே தேர்தல் பிரச்னையாக எப்படி கொண்டுசெல்வது என்று தீவிரமாக யோசித்துவரும் வைகோவுக்கு, அங்குள்ள நிலவரம் குறித்து சில புதிய தகவல்கள் கிடைத்திருக்கிறதாம்.

அதுகுறித்து ம.தி.மு.க-வினர் சிலர் நம்மோடு பகிர்ந்துகொண்டார்கள் -

”வன்னிப் பகுதியில் 18 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் புலிகளோடு தமிழர்களும் தங்கியிருக்கிறார்கள்.

அங்கு மொத்தம் மூன்று லட்சம் தமிழர்கள் தங்கியிருக்கிறார்கள்.

ஆனால், ராணுவம் நாற்பதாயிரம் பேர் என்கிறது. அரசுத் தரப்போ எழுபதாயிரம் பேர் தங்கியிருப்பதாக அறிக்கை விடுகிறது.

ஆக, லட்சக்கணக்கான தமிழர்களைக் கொல்ல ராணுவம் முடிவெடுத்தே உயிர்களின் எண்ணிக்கையைக் குறைத்துச் சொல்கிறது.
இன்னும் ஒரு வாரத்தில் இரண்டாவது சிறப்புப் படையணி ஒன்று உருவாக்கப்பட்டு, தாக்குதலை ஆரம்பிக்கும் என்று ராணுவம் அறிவித்திருக்கிறதாம்.

புலித் தலைவர் பிரபாகரன் இப்போதும் களத்தில் இருந்துதான் போராடுகிறார்.

அவர் பூரண ஆரோக்கியத்துடன் இருக்கிறார். பொட்டு அம்மானிடம் பொறுப்பை விட்டுக் கொடுத்துவிட்டதாக வரும் தகவல் சரியல்ல.
ஆனால், இலங்கை அரசு திட்டமிட்டுள்ள அடுத்த தாக்குதலை உலக நாடுகள் தடுக்காமல் அனுமதித்தால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நிகழும் பெரிய மனித அழிவாகவே அது இருக்கும்!” என்கிறார்கள் இவர்கள்.

ஆபரேஷன் விருதுநகர்..!

தொகுதிப் பங்கீட்டுப் பூசலில் வைகோ வெளியே வந்துவிடுவார் என்ற நிலை மாறியதில், தி.மு.க. முகாமுக்கு சற்று அதிர்ச்சிதானாம்.

வைகோவின் மீதான இலக்கை மேலும் கூர்மைப்படுத்தியிருக்கிறதாம் அறிவாலயம்.

”தேசியக் கட்சிகளான பி.ஜே.பி. மற்றும் காங்கிரஸ் மேலிடங்கள் எப்போதுமே வைகோ மீது ஒருவிதப் பரிவுடன் இருப்பதுவழக்கம்.

எனவே, வைகோ போட்டியிடும் தொகுதியில் மட்டும் காங்கிரஸ்வேட்பாளரை சுணங்க வைக்கும் முயற்சிகூட நடக்கலாம் என்று தி.மு.க-வுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.

அந்த சந்தேகத்துக்குத் துளிகூட இடம் தராத வகையில், காங்கிரசுக்கு ஒதுக்கியிருக்கும் விருதுநகரை தி.மு.க. திரும்ப வாங்கி, அங்கே தன்னுடைய வேட்பாளரை நிறுத்தக்கூடும்.

பதிலுக்கு ஆர்.எஸ்.பாரதிக்காக ஒதுக்கிய தென்சென்னையை காங்கிரசுக்குத் தரக்கூடும்.

மதுரைக்கு அடுத்து, அழகிரியின் உச்சகட்ட அதிரடிப் பார்வை விருதுநகர் மீதுதான்.

ஆக, விருதுநகர் ஒரு போர்க்களம்தான்!” என்று தகவல்கள் வரத் தொடங்கியிருக்கின்றன!

- எஸ்.சரவணகுமார்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.