ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Thursday, March 5, 2009

வைகோ உரை இந்திய - இலங்கைத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு தொடக்கவிழா தஞ்சாவூர் - 18.01.2009

இந்த ஏற்றமிகு நிகழ்ச்சியில் நான் உரையாற்றிட அரிய வாய்ப்பை நல்கி இருக்கின்ற விழாக் குழுவினருக்கும், அண்ணன் பழ.நெடுமாறன் அவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவிப்பது தலையாய கடமை ஆகும். ‘சகோதரச் சண்டைகூடாது’ என்று, ஏதோ நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் போர்முகத்தில் வாளேந்தி நிற்கின்றவகையில் கோவூர்க்கிழார் ஆலோசனை கூறியதைப்போல ஒரு பெரிய மனிதர் அண்மைக்காலமாக அடிக்கடி இந்த அறிவுரையை வழங்கிக்கொண்டு இருக்கின்ற வேளையில், தஞ்சையில் இந்தக் கூட்டம் நடக்கிறது.

அண்மையில் ஒரு தொலைக்காட்சிக்கு நான் நேர்காணலுக்குச் சென்றபோது, இதே கேள்வியை அந்த நிகழ்ச்சியை நடத்திய செய்தியாளர் என்னிடம் கேட்டார். என்னுடைய கருத்தைச் சொன்னேன். இது சிந்தனையாளர்கள் திரண்டு இருக்கின்ற மன்றம். என் தரப்பு வழக்கை இங்கே எடுத்துச்சொல்ல வந்து இருக்கிறேன்.

அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிசெற்றமும் உவகையும் செய்யாது காத்துஞமன்கோல் அன்ன சீர்மைத்தாகிசிறந்த பெயர் அறங்கூர் அவையத்தில்குரல் ஒலித்த தஞ்சைத் தரணியில் நான் பேசுகிறேன்.

நான் எடுத்து வைக்கின்ற வாதங்களை, எங்கள் தரப்பினர் எடுத்து வைக்கின்ற வாதங்களைச் செவிமெடுத்து உங்கள் இதயதராசுகளில் எடைபோட்டுப் பார்த்து, ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று இந்தக்கூட்டத்தின் வாயிலாகத் தமிழ்ப் பெருமக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

வெண்புறாக்களும் வல்லூறும் இணைந்து இருக்கமுடியாது - குயில்களும் கழுகுகளும் ஒன்றாக இருக்க முடியாது- மான்களும் நரிகளும் சேர்ந்து இராஜ்யம் நடத்த முடியாது - துரோகிகளும் போராளிகளும் ஒன்றாக இருக்க முடியாது. இது என்னுடைய கருத்து.

தமிழ் ஈழப் பிரச்சனையின் பல்வேறு பல்வேறு பரிணாமங்கள் இந்த மன்றத்தில் அலசப்பட்டு இருக்கின்றன. தமிழ் மக்களின் இதயத்தில் விசுவரூபம் எடுத்து இருக்கக்கூடிய கேள்வி அடுத்து என்ன நடக்கும்? என்ன ஆகும்? தமிழ் ஈழத்தில் அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று கேள்வி எழுந்து இருக்கின்றன. பல அரிய தீர்மானங்கள் இந்த விழாவில் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. தமிழ் ஈழப் பிரச்சனையை மையமாக வைத்து நம்முடைய தோழர்கள் இங்கே உரையாற்றி இருக்கிறார்கள்.

காண்டீபம் ஏந்திய அர்ஜூனன் கண்ணில் பறவையின் கழுத்தும், அம்பின் நுனியும்தான் தெரிந்தது. அதுபோல இலக்கு எதுவோ அதிலேதான் உன் கவனம் இருக்க வேண்டும் என்றார் அண்ணா. 1964 ஆம் ஆண்டு மலேசியாவுக்குச் சென்று திரும்பியபோது, வெள்ளிய மணற்பரப்பில் நீலக்கடல் அலைகளின் ஓசைகேட்டுக் கொண்டு இருக்கக்கூடிய மெரினா கடற்கரையில் தன் தம்பிமார்கள் இலட்சக் கணக்கில் திரண்டு இருந்தவேளையில் பேசுகிறபோது, இலக்கு எதுவோ அதில்மாத்திரம் நம் கவனம் இருக்க வேண்டும். ஆகவே, தம்பிமார்களே காங்கிரசை வீழ்த்துவது ஒன்றே உங்கள் இலக்காக இருக்க வேண்டும் என்று அண்ணா சொன்னதை நான் இந்தநேரத்தில் நினைவூட்டுவதற்குக் காரணம், இன்றைக்கு மொத்தப் பிரச்சனைக்கும் காரணமான பேரழிவை ஏற்படுத்தி இருக்கின்ற, தமிழர் இன அழிப்பு யுத்தத்தை நடத்திக் கொண்டு இருக்கக்கூடிய மன்னிக்க முடியாத பச்சைத் துரோகத்தைத் திட்டமிட்டுச் செய்து இருக்கிற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அதற்குத் தலைமை தாங்கக்கூடிய காங்கிரÞ கட்சிக்கு, அதோடு சேர்ந்து கொண்டு சொந்தம் கொண்டாடிக் கொண்டு இருக்கக்கூடிய பங்காளிகளுக்கு, அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கு, தமிழர்கள் சிந்துகின்ற ஒவ்வொரு சொட்டு இரத்தத்துக்கும் பொறுப்பாளியாக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகிற இந்தத் துரோகி கூட்டத்துக்கு, இனி தமிழகத்திலே இடம் இல்லை என்ற வகையில், அருமைத் தோழர் மகேந்திரன் சுட்டிக்காட்டியதைப்போல தமிழ்நாட்டு மக்கள் கொடுக்கக் கூடிய தண்டனை, இந்தத் துரோகத்திற்கு என்ன தண்டனை வரப்போகிற தேர்தல் களத்திலே?
இனிமேல் தில்லி ஆட்சி பீடத்திற்கு வரக்கூடிய எவருக்கும், தமிழர்களுக்குத் துரோகம் செய்கின்ற எண்ணம் துளிகூட வரக்கூடாத வகையில் தமிழக மக்கள் தீர்ப்பு அளிக்க வேண்டும். துரோகத்தை இயேசு மன்னிக்கலாம், மகாத்மாக்கள் மன்னிக்கலாம். மன்னிப்பதாகச் சொல்லலாம். ஆனால், துரோகத்திற்கு மன்னிப்பு கிடையாது. ஜூடாஸ்சை இன்றுவரை உலகம் மன்னிக்கவில்லை. எட்டப்பனை இன்று வரை தமிழகம் மன்னிக்கவில்லை. மீர்ஜாபரை இன்றுவரை வங்கம் மன்னிக்கவில்லை. காக்கை வன்னியனை என்றைக்கும் தமிழன் மன்னிக்க மாட்டான். கருணாக்களையும் என்றைக்கும் எந்தக் காலத்திலும் மன்னிக்க முடியாது.

அதைப்போல இந்திய அரசு செய்து இருக்கிற துரோகத்திற்கு என்ன தண்டனை? நம்முடைய அன்புக்குரிய தோழர்கள், செய்தியாளர்கள் மூலமாகக் கேட்கிறேன் அக்டோபர் திங்களின் முதல்வாரம் தொடங்கி, இன்றுவரையில் ஏறத்தாழ மூன்றரை மாத காலம் ஓடிவிட்டது. தமிழகத்திலே நடத்தப்பட்ட போலித்தனமான சில நாடகங்கள், சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அடுக்கடுக்கான போராட்டங்கள்.

கலைத்துறையினர், இலக்கியத் துறையினர் ஒருசேர எழுந்து தமிழகத்தில் கொந்தளித்து ஈழத்தமிழர் களைக் காக்கவேண்டும் என்ற முறையில் எரிமலையாகச் சீறிவந்தபோது அதைத்தடுக்கின்ற முயற்சியில் இங்கே தோழர் அவர்கள் பேசினார். பொங்கி வருகின்ற உணர்ச்சிக்கு தடைபோட்டுவிடக்கூடாது என்று நான் வரவேற்கிறேன். பொங்கி எழுந்து எரிமலையாக சீறிய உணர்வுகளுக்குத் தடை போட்டது யார்? திசை திருப்பியது யார்? ஆர்ப்பரிக்கின்ற எண்ணங்களுக்கு அலைஅலையாக வந்த கொந்தளிப்பு உணர்ச்சியை அடக்கி, மேலும் எழவேண்டிய உணர்வுகளை தடுத்தது யார்? பொய்யான நம்பிக்கை களை ஊட்டியது யார்? நான் முதல் அமைச்சரைக் குற்றம் சாட்டுகிறேன். அனைத்துக் கட்சிகளின் ஒட்டுமொத்தத் தீர்மானம், மாறுபட்ட கருத்துகளை விடுதலைப்புலிகள் மீது கொண்டுள்ள கட்சிகளும் சேர்ந்து சட்டமன்றத்தில் ஒருமனதாக அபூர்வமாக நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம்.

யுத்தத்தை நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துகின்ற ஒருமனதான தீர்மானத்தைக் காலில்போட்டு மிதித்துவிட்டு, தில்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் 7 ஆம் நம்பர் வீட்டுவாசலுக்கு முன்னால் பிரதமர் வீட்டுக்கு முன்னால் நின்று இரஜபக்சே உடம்பை முறுக்கி, கையை முறுக்கி, தோளை உயர்த்தி கொக்கரித்து விட்டுப்போனானே இதைவிட என்ன அவமானம் இருக்க முடியும்?

ஒப்புக்குக்கூட கொழும்பு வரை போய் யோசித்துச் சொல்கிறேன் என்று சொல்லாமல், ‘போர் நிறுத்தமா? அந்தப் பேச்சுக்கே இடம் இல்லை; புலிகளை அழித்து விட்டுத்தான் மறுவேலை’ என்று கொக்கரித்தான்.
அடுத்து இவர் நடத்திய நாடகம். சில கட்சித்தலைவர்களை அழைத்துக்கொண்டு போய், பிரதமரைச் சந்தித்து ஒரு ஐந்து நிமிடம் ஈழத்தமிழர் பிரச்சனையைப் பேசிவிட்டு, மாநில அரசுக்குத் தேவையான மற்ற விஷயங்களைப் பேசினாரே? பிரணாப் முகர்ஜி போகப் போவதாக மன்மோகன்சிங் சொல்லாமல், போவதாகச் சொல்லி இருக்கிறார் என்று முதல்அமைச்சர்தான் சொன்னார். மன்மோகன் சிங் ஊமையாகி விட்டாரா? நாக்கு மரத்துப் போய் விட்டதா? பேச்சு மரத்துப் போய்விட்டதா? பேசத்தெரியாதா? சொரணையற்றுப் போய்விட்டதா? கோமா நிலையில் இருந்தாரா? ஏன் சொல்லவில்லை?ஆறரைக் கோடி மக்களின் இதயதாகமான சட்டமன்றத் தீர்மானத்தை நிறைவேற்றிய பிறகு முதலமைச்சர் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டுபோய் பார்த்தபிறகும் ஏன் பிரதமர் பேசவில்லை? பிரதமர் பேசியதாக இவர் ஊதுகுழலாக மாறி, பிரணாப் முகர்ஜியை அனுப்பப் போகிறார் என்றீர்களே, எப்பொழுது?

இரங்கல் தீர்மானம் என்றைக்குப் போடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறீர்களா? முன்கூட்டியே ஏதாவது இரங்கல் கவிதையை எழுதி வைத்து இருக்கிறீர்களா? உங்கள் எண்ணம் ஒருபோதும் நடக்காது. வாழ்வார்கள் அவர்கள். புலிகள் வெல்வார்கள். நூறாண்டுகள் இன்னும் பிரபாகரன் உயிரோடு இருப்பார்.
நாள், நட்சத்திரம் பார்த்து இருக்கிறீர்களா? பிரணாப் முகர்ஜி போகப்போகிறார் என்றீர்களே, அதே பிரணாப் முகர்ஜியை உங்கள் வீட்டு வாசலில் நிருபர்கள் கேட்ட போது என்ன சொன்னார்? அங்கு நடக்கின்ற சண்டையில், நாங்கள் எப்படித் தலையிட முடியும்? என்று கேட்டார்.
இதே நாட்டில்தான் பண்டித ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தார். ஆசிய ஜோதியாகத் திகழ்ந்தார். உலக நாட்டுத் தலைவர்களில், டிட்டோ என்ன சொல்கிறார்? நாசர் என்ன சொல்கிறார்? சுகர்னோ என்ன சொல்கிறார்? குருஷேவ் என்ன சொல்கிறார்? கென்னடி என்ன சொல்கிறார்? இவர்கள் எல்லாவற்றையும்விட ஜவஹர்லால் நேரு என்ன சொல்கிறார் என்று கேட்டுக்கொண்டு இருந்த காலத்தில், 1960 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் நாள் இந்திய நாடாளுமன்ற மக்களவையில் ஒரு தீர்மானத்தை அவர் முன்வைத்தார். தென்னாப்பிரிக்க நாட்டில் இருக்கக்கூடிய லங்கா பார்க் என்கின்ற இடத்திலும் என்ற இடத்தில், வெள்ளைக்கார இராணுவத்தினரும், காவல் துறையினரும் சுட்டதில் நீக்ரோ இளைஞர்கள் சிலர் கொல்லப்பட்டு விட்டார்கள். அதைக் கண்டித்து இந்தத் தீர்மானத்தை முன்வைக்கிறேன் என்று தீர்மானத்தை வாசித்து விட்டு விளக்கம் சொல்லிப் பேசினார் நாடாளுமன்றத்தில்.
ஒரு நாட்டு விவகாரத்தில் இன்னொரு நாடு தலையிடக்கூடாதுதான். நம் நாட்டு விவகாரங்களில் இன்னொருநாடு தலையிடுவதை நாம் ஏற்றுக்கொள்ளப் போவது இல்லைதான். ஆனால், அது சாதாரண நடைமுறைகள். அசாதாரணமான சம்பவங்கள் நடைபெறுகிறபோது, நம்முடைய உணர்வுகளை அழுத்தம் திருத்தமான முறையில் பதிவு செய்து தீர வேண்டும். அது நாட்டின் எல்லைகளைக் கடந்து நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்துவது கடமை என்பதால் இந்தத் தீர்மானத்தை இங்கே வைத்து இருக்கிறேன் என்றார்.
தென்னாப்பிரிக்க நாட்டில் லங்கா பார்க் என்கின்ற இடத்திலும் .... என்ற இடத்தில் 10 நீக்ரோ இளைஞர்கள் கொல்லப்பட்டதற்காக நேரு அன்றைக்குத் தீர்மானம் கொண்டுவந்தார் தென்னாப்பிரிக்கா அரசைக் கண்டித்து. அதே இந்திய நாடாளு மன்றத்தில் 1971 ஆம் ஆண்டு இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் அன்றைக்கு கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த பாகிஸ்தானத்திற்குள் கொட்டடியில் ஷேக் முஜிபுர் ரàமான் பூட்டப்பட்டுக் கிடந்து, மேற்கு பாகிஸ்தான் இராணுவம் அங்கே அத்துமீறி செல்லப்போகின்ற அந்தவேளையில் இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானத்தைக் கொண்டுவந்து உலக நாடுகளை நாங்கள் கேட்கிறோம். ஒரு இனம் அழிக்கப்படுகிறது என்று சொன்னார். இது இந்திரா காந்தி வார்த்தை. ‘ஒரு இன அழிப்பு என்கின்ற எல்லைக்குப் போய்விட்டது இதை நாம் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது. நாம் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. உள்நாட்டுப் பிரச்சனை என்று நாம் அலட்சியப்படுத்த முடியாது. இது ஒரு மனித உரிமை பிரச்சனை. மனிதாபிமான பிரச்சனை. ஆகவே உலகத்தின் அத்தனை நாடுகளின் ஆதரவையும் கேட்கிறோம். இந்த அக்கிரமத்தைத் தடுப்பதற்கு இந்திய நாடாளுமன்றம் வேண்டுகோள் வைக்கிறது’ என்று தீர்மானம் நிறைவேற்றினார்.
நான் கேட்கிறேன். இன்னொரு நாட்டின் பிரச்சனையிலே போய் தலையிட வேண்டும் என்று அவர்கள் தீர்மானம் போட்டார்கள் என்றால் சிவாஜிலிங்கம் இங்கே கேட்டதைப் போல, நீங்கள் அங்கே போய்ப் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று உரிய நடவடிக்கை எடுக்கப்போவது கிடையாது. போர்நிறுத்தம் செய்யச் சொல்லிக் கேட்கவில்லை. ராஜபக்சே சொல்லிவிட்டான், இந்திய அரசு எங்களை போர் நிறுத்தம் செய்யச்சொன்னது இல்லை. அவனுடைய ஆலோசகராக இருக்கக்கூடிய அவனது சகோதரன் பசில் இரஜ பக்சே சொல்லிவிட்டான். இந்தியா ஒருபோதும் எங்களை போர்நிறுத்தம் செய்யச் சொல்லவில்லை; எங்களுக்கு பரிபூரண இராணுவ உதவியை இந்தியா செய்து கொண்டு இருக்கிறது’ என்று சொன்னான்.
நேற்றைக்கு சிவசங்கரமேனன் பார்த்த அதே வெளி விவகார அமைச்சர் பகிரங்கமாகச் சொன்னான் ‘இந்தியா எங்களுக்கு எல்லாவிதமான இராணுவ உதவியும் செய்து கொண்டு இருக்கிறது’ என்று அக்டோபர் மாதத்திலேயே சொல்லிவிட்டான். அவன் சொல்லிய மூன்றாம் நாள், இந்தியாவின் இராணுவத் துணை அமைச்சர் பள்ளம் ராஜூ வெளிப்படையாகவே தில்லியில் சொன்னார். நாங்கள் இலங்கைக்கு இராணுவரீதியாக உதவிகளை செய்து கொண்டு இருக்கிறோம் என்று சொன்னார்.
ஆக, இந்தியா இராணுவ உதவி செய்கிறது என்று இந்திய இராணுவ அமைச்சர் ஒப்புக் கொண்டார். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மகாத்மா காந்தியின் பிறந்த நாளாகிய அக்டோபர் திங்கள் 2 ஆம் நாள் எனக்கு எழுதிய கடிதத்தில் இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக இந்தியா இராணுவ ரீதியான ஆயுதங்களை வழங்கி இருக்கிறது என்று ஒப்புக் கொண்டு இருக்கிறார். ஆகவேதான் நாங்கள் அவர்களைக் குற்றக்கூண்டில் நிறுத்துகிறோம்.
இலங்கையில் தமிழர்கள் இவ்வளவு பேர் படுகொலை செய்யப்படுவதற்கு நீங்கள் தந்து இருக்கின்ற ஆயுதங்கள் காரணம். இந்த ஆயுதங்கள் கொடுக்கப்பட்டதன் விளைவு நான் தமிழகத்தின் முதல்வர் அவர்களைக் கேட்கிறேன் இந்த நான்காண்டு காலமாக நடக்கின்ற துரோகம் உங்களுக்குத் தெரியும். அதில் பங்குவகிக்கின்ற கட்சிகள் அனைத்துக்கும் தெரியும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பு ஏற்ற உடன் அதனுடைய குறைந்தபட்ச செயல்திட்டத்தில், ஈழத்தமிழர்கள் பிரச்சனையைச் சேர்ப்பதற்குப் பாடுபட்டவன் இந்த ஒலிபெருக்கிக்கு முன்னால் நிற்கிற வைகோ. அரசு அமைந்த மூன்று மாத காலத்திற்குள், இந்திய - இலங்கை இராணுவ ஒப்பந்தம் போடத்திட்டமிட்டுக் கையெழுத்துப் போடுவதற்கு நாள்குறித்த போது அதைத் தடுப்பதற்குத் தில்லியில் தலைவர்களின் வீடுவீடாகப் போய்ப் போராடியவன்.
கம்யூனிஸ்ட் தலைவர்களை, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை, ஏன் காங்கிரஸ் கட்சியில் இன்றைக்கு மருத்துவமனையில் இருக்கிற நான் என்றைக்கும் மறக்க முடியாத உதவிகளைச் செய்த பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷியை - சரத்பவாரை - லாலு பிரசாத் யாதவ்வை - ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தை - ஏ.பி.பரதனை - என ஒவ்வொருவராகச் சந்தித்து, ‘நீங்கள் இதைத் தடுக்க வேண்டும்’ என்று கேட்டதோடு, சோனியாகாந்தி அம்மையார் வீட்டுக்குச் சென்று சந்தித்து - மன்மோகன் சிங்கை சந்தித்துத் தடுத்து நிறுத்தினோம். ஆனாலும், இவர்கள் ஒப்பந்தம் போடவில்லையேதவிர, அந்த ஒப்பந்தத்தின் சரத்துகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று கொழும்புக்குச் சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் சொன்னார்.
இன்றைக்குக் குஞ்சும் குளுவானுமாகச் செத்து மடிகிறார்கள் அங்கே, நமது குழந்தைகள், பெண்கள். விமானங்கள் இரவிலும் பகலிலும் குண்டுவீசிக் கொண்டு இருக்கின்றன என்கிறார்கள். அந்த குண்டு வீசுகின்ற விமானங்கள் புறப்பட்டுச் செல்கின்ற பலாலி விமானதளத்தை பழுதுபார்த்துக் கொடுத்த துரோகி இந்திய அரசு. இந்தக் குண்டு வீச்சில் செத்து இருக்கிற ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளையின் இரத்தத்திற்கும் பொறுப்பு ஏற்க வேண்டியது இந்திய அரசு.
நீதான் ஆயுதம் தீட்டிக் கொடுத்தாய், நீதான் துப்பாக்கி தூக்கிக் கொடுத்தாய், நீதான் விமான தளத்தைப் பழுதுபார்த்துக் கொடுத்தாய் என்று ஒத்துக்கொண்டு சொன்னான் டொமினிக் பெரைரோ, யார் இலங்கையின் விமானப்படைத் துணைத் தளபதி. அவன் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் அன்று சொன்னான். ‘இந்திய அரசு அவர்களுடைய பணத்தில் இந்தப் பலாலி விமானதளத்தைப் பழுது பார்த்துக் கொடுத்தார்கள் நாங்கள் எங்க விமானங்களை இயக்க முடிகிறது’ என்று சொன்னான்.
ஆக, நீ பழுது பார்த்துக் கொடுத்தாய் விமானம் குண்டு வீசுகிறது. அப்படி கைபர் ஜெட் விமானங்கள் குண்டுவீசியதே எங்கள் குழந்தைகள் 61 பேர் செஞ்சோலையில் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டார் களே, ஏ இந்திய அரசே! மனிதாபிமானத்தைக் காலில் போட்டு மிதித்துவிட்டாயா? குழிதோண்டிப் புதைத்துவிட்டாயா? போர்க்களத்தில் பெற்றோரை இழந்த அநாதைச்சிறுமிகள் 61 குழந்தைகளை செஞ்சோலையில் சுட்டுக் கொன்றீர்கள், குண்டுவீசிக் கொன்றீர்கள்.
சுனாமி பேரழிவில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ வந்த பிரெஞ்சு நிவாரண முகாமில் பணியாற்றிய 17 இளைஞர்கள் ஒரு இÞலாமிய இளைஞர் உள்பட உச்சந் தலையில் துப்பாக்கிக் குண்டால் சுட்டுக் கொன்றீர்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேரை பட்டப்பகலில் நடுவீதியில் சுட்டுக்கொன்றது இலங்கை இராணுவப்பிரிவுகள். சண்டே ரீடர் என்ற பத்திரிகையின் ஆசிரியரை விக்கிரமதுங்காவை அவன் அரசை விமர்சித்தான் என்பதற்காக திட்டமிட்ட படுகொலையை மகிந்த இரஜபக்சேவின் கொலைகார கூட்டம் செய்து முடித்தது. இதேகூட்டம்தான் நமது போற்றுதலுக்குரிய செய்தியாளர் தராக்கியை நடுவீதியில் சுட்டுக் கொன்றது. இவையெல்லாம் மனித உரிமை மீறல்கள் இல்லையா?
அன்புக்குரியவர்களே, கா[hவில் போர்நிறுத்தம் இன்றைக்குப் பிற்பகலில் அறிவித்து விட்டான் இஸ்ரேல்காரன். காசாவில் குண்டு வீச்சு நிறுத்தப்படும். நான் கேட்கிறேன் அந்த ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவன் துப்பாக்கி எடுக்கவில்லையா? யாசர் அரபாத்தை நான் நெஞ்சில்போற்றுகிறேன். கடைசிவரை இலட்சியத்துக்காகவே இருந்து உயிர் துறந்தான். ஒலிம்பிக் பந்தயத்துக்குள் பகை இருக்கமுடியாது. விரோதம் இருக்க முடியாது. வேற்றுமை இருக்க முடியாது. ஆனால், அந்த மூனிச் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்த 11 இஸ்ரேல் வீரர்களை அர்த்த இராத்திரியில் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் உள்ளேபுகுந்து சுட்டுக் கொன்றார்கள். நாங்கள்தான் கொன்றோம் என்றும் சொன்னார்கள். அந்தப் பயங்கரவாதிகள் பி.எல்.ஓ. ஆனால், உலகம் அவர்களைப் பழிக்கவில்லை. 145 நாடுகள் பி.எல்.ஓவை அங்கீகரித்து இருக்கின்றன.
இன்றைக்கு உலகத்தின் அனைத்து நாடுகளிலும் வீதிகளிலும் காசாவில் குண்டுவீச்சைநிறுத்து என்று பொங்கி எழுந்தார்கள், ஐரோப்பிய நாடுகளில் நகரங்களில் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் மக்கள் அத்தனைபேரும் பொங்கி எழுந்தார்கள்.
இதோ சண்டை நிறுத்தப்பட்டு விட்டது. ஹமாÞ இயக்கத்தினர் துப்பாக்கி தூக்கவில்லையா? இஸ்ரேலில் இருக்கக்கூடிய யூதர்களில் பலரை துப்பாக்கித் தூக்காத யூதர்களும் அவர்களுடைய தாக்குதலில் செத்து இருக்கிறார்கள். ஆனால், உலகத்தின் பார்வையில் ஈழத்துத் தமிழன் மனிதனே இல்லையா? தனிநாடு கேட்கக்கூடாது. யார் சொல்வது? இந்திய அரசு. நீ யார்? உனக்கென்ன அதிகாரம்?
அப்படியானால்? வங்கதேசம் என்ற அமைப்பின் வரைபடத்தை இந்திய இராணுவம் உருவாக்கிக் கொடுத்ததே எந்த அடிப்படையில்? நாடுகளின் எல்லைக் கோடுகள் என்ன 10,000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்டவையா? நான் கேட்கிறேன். அல்லது ஆண்டவன் வகுத்ததா? தேசத்தின் எல்லைக் கோடுகள் என்பது என்ன? ஒரு தேசம் என்பது என்ன? ஒரு இனம் என்பது என்ன? நாங்கள் இப்படித்தான் சேர்ந்து ஒன்றாக இருக்கமுடியும் என்று நினைத்தால் அது ஒரு நாடு. பாகிÞதானும் - இந்தியாவும் சேர்ந்து இருக்கவிரும்பி இருந்தால் ஒரு நாடு. இல்லை நாங்கள் தனியாகப்போவோம் என்றார் ஜின்னா. அது தனி நாடாக ஆனது. நாங்கள் தனியாகப் போவோம் என்றது ஒரு கொசாவோ. ஐரோப்பிய மண்டலம் ஏற்றுக் கொண்டு விட்டது. வாக்கெடுப்பின் மூலம் மக்களின் கருத்தின் அடிப்படையில் ஒரு நாடு அமைய வேண்டும் என்றால் 74 சதவிகித மக்கள் ஓட்டுப்போட்ட கிழக்கு தைமூர் இன்றைக்குத் தனிதேசம். தடுத்துவிட்டதா இந்தியா அரசு? ஆஸ்திரேலியாவின் உதவியோடு, கிழக்கு தைமூர் என்ற தனி நாடு அமைந்ததே?
இதோ செர்பியாவில் மாண்டி நீரோ சேர்ந்து இருப்பதா தனிநாடு அமைப்பதா? வாக்குப்பதிவு. 54 சதவிகித மக்கள்தான் ஓட்டுப்போட்டார்கள். மாண்டிநீரோ தனிநாடாக ஆயிற்று. கீரைப்பாத்தியாக உள்ள ஒரு பகுதி, இன்றைக்குத் தனிநாடு. ஆக, உலகத்தில் இதெல்லாம் நடக்கிறது.
1948 ஆம் ஆண்டில் பிரிட்டிக்ஷ்காரன் அதிகாரத்தைச் சிங்களவனிடம் ஒப்படைக்கிறபோது எங்களையும் சமமாக கெளரவமாக உரிமையோடு வாழ்வதற்கு அனுமதிப்பார்கள் என்று கருதி அந்தச் செயற்கையான ஒற்றுமையை ஏற்றுக்கொண்ட விளைவு அந்தத் தவற்றை நாங்கள் அனுபவிக்கிறோம் என்று தந்தை செல்வா சொன்னார். துப்பாக்கி ஏந்திய செல்வா அல்ல. ஈழத்துக் காந்தி என்று போற்றப்பட்ட செல்வா. வட்டுக்கோட்டைத் தீர்மானம் அதுதான். இனி சேர்ந்துவாழ சகவாழ்வுக்கு சாத்தியம் இல்லை. காங்கேசன்துறை இடைத்தேர்தலில் ஒட்டுமொத்தத் தமிழ்மக்களும் செல்வாவை வெற்றி பெறச் செய்தபோதே, ஈழத்தை ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.
அடுத்து 1977 தேர்தல். ஈழத்துத்தமிழ் மக்கள் நாங்கள் தனித்து வாழ விரும்புகிறோம் என்று அறிவித்தார்கள். அவர்கள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள்? நம்முடைய குழந்தைகளைக் கொன்றார்கள், பெண்களைக் கொன்றார்கள், நாசப்படுத்தினார்கள். இதேபோல ஒரு தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது யாழ்ப்பாணத்தில், அந்த இடத்துக்குள் திடீரென்று உள்ளே நுழைந்து எந்திரத் துப்பாக்கியோடு நான்கு பேரைச் சுட்டுக் கொன்றான். ஏற்றுக் கொள்ள முடியுமா? மின்சாரக் கம்பங்களைச் சாய்த்து 7 பேர் கொல்லப்பட்டார்கள். உண்ணாவிரதத்துக்கு சென்ற தமிழர்கள் தாக்கப்பட்டதை தோழர் சொன்னார்.என்ன தீர்வு? அரசியல் தீர்வு. யாரை முட்டாள் என்று நினைத்துக் கொண்டாய் நீ? இந்திய அரசு. சிவசங்கர மேனன் அங்கேசென்று வயிறுமுட்ட விருந்து சாப்பிட்டுவிட்டு வருவதற்கு அனுப்பிவிட்டு இந்த சிவசங்கரமேனனும் எம்.கே.நாராயணனும் சேர்ந்துதான் இவ்வளவு துரோகத்திற்கும் காரணம். அவர்களை அனுப்புகிறாயா? இவர்கள் சேர்ந்துதான் எல்லா வரைபடமும் போட்டுக் கொடுத்தவர்கள். இந்தியா ஆயுதம் கொடுத்தது. இந்தியா ரேடார் கொடுத்தது. இந்தியா வட்டியில்லாக் கடனாக ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தது.
அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு பாகிஸ்தானில் ஆயுதம் வாங்கி இருக்கிறான். அந்த பணத்தை வைத்துக் கொண்டு ஈரானில் ஆயுதம் வாங்கி இருக்கிறான். அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு சீனாவில் ஆயுதம் வாங்கி இருக்கிறான். அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு இஸ்ரேலில் இருந்து விமானங்கள் வாங்கி இருக்கிறான். அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு ஐரோப்பா கண்டத்தில் இருந்து விமானங்கள் வாங்கி இருக்கிறான். நீ வட்டியில்லா கடனாக கொடுத்த பணத்திலே எங்கள் வரிப்பணமும் அதில் இருப்பதனால் கேட்கிறேன். நாங்களும் குடிமக்கள்தான் என்பதால் கேட்கிறோம். இவ்வளவு நாடுகளின் ஆயுதங்களையும் அவன் வாங்கிக் குவித்து இருக்கிறான். உலகத்தில் இப்படிப்பட்ட அக்கிரமங்கள் ஏதாவது உண்டா?
மும்பைச் சம்பவத்திற்குப் எல்லையில் போர் தொடுக்கவும் தயங்கமாட்டோம் என்று மிரட்டல் விடுகிற இந்திய அரசைக் கேட்கிறேன். பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, அங்கிருந்து வந்து தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆதரவு கொடுத்ததாகச் சொன்னாரா? அல்லது எங்கள் அரசு இதற்குப்பின்னணியில் இருக்கிறது என்று சொன்னாரா? அல்லது அப்படி தாக்குதல் நடத்தியவன் பாகிஸ்தான் தேசத்துக் கொடியோடு வந்தானா? நான் கேட்கிறேன். சர்தாரி இன்றுவரையில் அதை எதிர்க்கிறேன் என்றுதான் சொல்கிறார்.
ஆனால், சிங்கக் கொடி போட்ட கப்பலில் இலங்கை அரசுக் கப்பலில் வந்து அதனுடைய கடற்படை படகுகளில் கப்பலில் வந்து, எங்கள் எல்லையில் எங்கள் கடலுக்கு உள்ளே வந்து இதுவரை 900க்கும் மேற்பட்ட தடவை துப்பாக்கிச்சூடு நடத்தி, 500 க்கும் மேற்பட்ட எங்கள் தாய்த்தமிழகத்து மீனவர்களைக் கொன்று விட்டானே? நீ என்ன செய்தாய்?
அங்கே கிளிநொச்சியைத் தாண்டி இப்பொழுது நடைபெறுகிற சண்டையில் கீழே விழுந்து மிதிக்கின்ற குண்டுகளின் முத்திரையில் ஈரானின் அரபிக் எழுத்து இருக்கிறது. இஸ்ரேலும் ஈரானும் ஜென்மப் பகை. தமிழனைக் கொல்வதற்கு இஸ்ரேலின் விமானம் குண்டு வீசுகிறது. ஈரானின் குண்டுகளும் விழுகின்றன. பாகிஸ்தானோடு முண்டா தட்டுகிறது இந்தியா. பாகிஸ்தான் ஆயுதமும் தமிழன்மீது விழுகிறது. இந்திய ஆயுதமும் தமிழன்மீது விழுகிறது. கத்தை கத்தையாக, கொத்துக்கொத்தாகக் குண்டுகள் வெடிக்கின்றன. நார்வேயில் நிறைவேற்றிய தீர்மானம் 102 நாடுகள் நிறைவேற்றிய தீர்மானத்தில் தமிழனை மனிதசமுதாயத்தில் சேர்க்கவேயில்லையா இந்த உலக சமுதாயம்?
எனக்குத்தெரிய விடுதலைப் போராட்ட வரலாறுகளைப் படித்த தோழர்கள் இங்கே இருக்கிறார்கள். எந்த விடுதலைப் போராட்டத்துக்கும் புரட்சிக்கும் பக்கத்து நாடுகள் இன்னொரு நாடுகள் தூரத்தில் இருக்கும் நாடுகள் ஆயுத உதவிகள் செய்து அந்தப் புரட்சிகளை வெற்றிபெற வைத்து இருக்கின்றன. எல்லா புரட்சியிலும்.
ஆனால், உலகம் இதுவரை கண்டும் கேட்டும் இராத, இந்தத் தமிழர்கள் நடத்துகிற யுத்தத்தில்தான் எந்த நாட்டின் உதவியும் இல்லை. ஆறரைக் கோடித் தமிழர்கள் வாழுகிற தொப்புள்கொடி உறவுகொண்டு இருக்கக்கூடிய தொட்டில் பூமியில் இருந்தும் இங்கே இருந்து இந்தியாவும் பகைவனுக்கு ஆயுதம் கொடுத்து அவர்களை அழிக்கப் பார்க்கிறது. இத்தனை நாடுகளின் ஆயுதங்களையும் எதிர்த்து தமிழன் அங்கே நிற்கிறானே?
இந்திய அரசு இவ்வளவு துரோகத்தையும் செய்துவிட்டு, போரை நிறுத்து என்று இவர்கள் சொல்லவில்லை. ஏனென்றால், போரை நடத்தச் சொல்வதே இவர்கள்தான். போரை இயக்குவதே இவர்கள்தான். போரின் பின்னணியில் இருப்பவர்களே இவர்கள்தான். இவர்கள்தான் குற்றவாளிகள். இரஜபக்சேவைவிட இவர்கள்தான் குற்றவாளிகள். இவர்கள்தான் இந்தத் துரோகத்தை செய்பவர்கள். போரை நிறுத்தச் சொல்ல வேண்டாம் துரோகத்தை நிறுத்துங்கள். இந்திய அரசே துரோகத்தை நிறுத்து. இதனுடைய பின் விளைவுகள் வருங்கால சந்ததிகளின் மனதில் வேறுவிதமான எண்ணங்களை ஏற்படுத்தும் என்று நான் எச்சரிக்கிறேன். அதற்கான விதைகளை விதைக்காதீர்கள் என்று இந்திய அரசை எச்சரிக்கின்றேன்.
இந்தியாவின் அரசியல் பூகோள அமைப்பில் அக்கறைகொண்டுதான் நாங்கள் கேட்கிறோம். நமக்கு பேராபத்தை தெற்கே உருவாக்கிக் கொண்டு இருக்கிறது இந்திய அரசு. பாகிÞதானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு இலங்கையில் இயங்குகிறது. இப்பொழுதே களம் அமைக்கத் தொடங்கிவிட்டார்கள் அங்கே. நீ மேற்குக் கடற்கரையில் கடல் வழியாக வருகிற ஆபத்தைவிட தெற்கே இருந்து பேராபத்து இந்தியத்துணைக்கண்டத்துக்கு ஏற்படப்போகிறது. அதைத் தடுக்கின்ற ஒரே அரண் ஈழத்துத் தமிழர்கள் தான் என்பதை நீ மறந்துவிடாதே.
இந்தத் துரோகம் இன்றல்ல 1987 இல் இருந்து தொடங்கிவிட்டது. அருமைத் தோழர் தியாகு அவர்கள் சொன்னாரே, 518 ஆம் எண் அறை அசோகா ஓட்டலில் அடைக்கப்பட்டு இருந்த பிரபாகரன் அவர்களை செய்தியாளர்கள் தொடர்பு இல்லை, சந்திக்க முடியவில்லை. நீங்களாவது தகவல் தெரிந்து சொல்லுங்கள் என்று என்னிடம் சொன்னார்கள். அந்த நாளில் ஏமாற்றி அழைத்து வந்து, வஞ்சகமாக உங்களை ஈழத்துத்தமிழர்களின் ஏகப்பிரதிநிதியாக அறிவிக்கப் போகிறார் ராஜீவ்காந்தி உங்களை ஈழத்துத்தமிழர்களின் ஏகப்பிரதிநிதியாக அறிவித்து, உங்கள் இலட்சியத்தை வெற்றிபெறச் செய்வதற்கு ஏற்பாடு செய்து இருக்கிறார் என்று பசப்பி, இனிஒருபோதும் இந்திய மண்ணில் கால் எடுத்துவைக்க மாட்டேன் என்று பெங்களூர் சார்க் மாநாட்டுக்குப்பிறகு உறுதி எடுத்துவிட்டுப் போன பிரபாகரனை ஏமாற்றி அழைத்துக் கொண்டுவந்தார்கள். சென்னை விமான நிலையத்தில் நம்பிக்கையோடு அவர் பேட்டி கொடுத்ததை இந்து பத்திரிகை அன்றைக்கு எட்டுக்காலத்தில் போட்டது.இனிஒருபோதும் இந்திய மண்ணில் கால் எடுத்துவைக்க மாட்டேன் என்று உறுதி எடுத்துவிட்டுப் போன பிரபாகரனை ஏமாற்றி அழைத்துக் கொண்டுவந்தார்கள். சென்னை விமான நிலையத்தில் நம்பிக்கையோடு அவர் பேட்டி கொடுத்ததை இந்து பத்திரிகை அன்றைக்கு எட்டுக்காலத்தில் போட்டது.
தில்லிக்கு அழைத்துக் கொண்டு சென்றவுடன் ஓட்டல் அறையில் பூட்டி விட்டார்கள். எவரையும் சந்திக்கவிடாமல் செய்துவிட்டு ஜெ.என்.தீட்ஷித் அந்த அறைக்குள்சென்று இப்படி ஒரு ஒப்பந்தம் போடப்போகிறோம் இந்தியா - இலங்கை ஒப்பந்தம் என்று அந்த டிராப்டைக் காட்டி இருக்கிறார்கள். அவரிடத்தில் ஒரு பிரதிகூட கொடுக்கவில்லை. அந்தப் பிரதியை வாசித்து விட்டுத் திரும்பக் கொடுங்கள் என்றார். பாலசிங்கம் அதை வாசித்தார். அதனுடைய பொருளை வரிவரியாகச் சொல்லிக் கொண்டு இருந்தார். அதை எதிர்பார்க்கவேயில்லை அவர்கள்.
அவருடைய உள்ளத்தில் தணல். அவர்களுடைய மனதில் வேதனை. இது பச்சைத் துரோகம் என்றார்கள். இதை நாங்கள் ஏற்கமுடியாது இதை எங்கள்மீது திணிக்காதீர்கள். நாங்கள் மகத்தான தியாகங்களை செய்து உருவாக்கி இருக்கக்கூடிய எங்கள் இலட்சியக் கனவுகளைச் சிதைத்து விடாதீர்கள். இதை எங்கள் மீது நீங்கள் திணிக்கிறீர்கள், நாங்கள் ஏற்க முடியாது’ என்று பிரபாகரன் சொன்னார். மறைந்த பாலசிங்கம் அவருடைய இல்லத்தில் ஒரு நாள்முழுக்க நான் பழைய சம்பவங்களைப் பேசிக் கொண்டு இருந்தபோது வருத்தத்தோடு சொன்னார். மிஸ்டர் வைகோ இதை உங்களிடம் சொல்கிறேன்: இதை புத்தகத்திலும் பதிவுசெய்வேன் என்று சொல்லிவிட்டு, ‘தீட்ஷித் அவன் சுருட்டு குடிக்கிறவன் அதாவது ஹூக்கா குடிக்கிறவன் அந்தப்புகை போய்க்கொண்டே இருக்கிற பொழுது அவன் சொன்னானாம். இந்தப் புகை அணையும் நேரத்துக்கு உள்ளாக உங்களை ஒட்டுமொத்தமாக நசுக்கி விடுவோம்’ என்று சொன்னானாம். இது பாலசிங்கம் சொன்னது.
உடனே, எங்கே அவருக்கு மனதில் ஆத்திரம் வந்துவிடுமோ என்று தம்பியின் கையை அப்படியே நான் அழுத்திப் பிடித்துக் கொண்டேன் என்றார். இப்படி எங்களுக்குப் பச்சைத் துரோகம் செய்தார்கள். அதன்பிறகு அவர்கள்மீது திணிக்கப்பட்ட ஒப்பந்தம் குறித்து சுதுமலை கூட்டத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் மத்தியில் பிரபாகரன் பேசுகிறபோது ஒரு வல்லரசு எங்கள்மீது இதைத் திணித்துவிட்டது. நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம். இந்திய மக்களை நேசிக்கிறோம். நாங்கள் எத்தனையோ உயிர்த் தியாகம் செய்து பாடுபட்டு இருக்கக்கூடிய அமைப்பை சீர்குலைக்கக்கூடிய வகையில் இந்த ஒப்பந்தத்தை ஒரு வல்லரசு எங்கள்மீது திணித்து இருக்கிறது. சிங்கள இனவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கிவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை. ஆனால், எங்கள் பாதுகாப்பை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம் என்று சொன்னார்.
அதற்கா பரிசு புலேந்திரன் சாவு? அதற்கா பரிசு குமரப்பா சாவு? அதற்கா பரிசு 12 தளபதிகள் சாவு? அதற்கா பரிசு திலீபன் மரணம்? 12 நாள் உண்ணாவிரதம் இருந்த நேரத்தில் அங்கு இருந்து கூப்பிடு தொலைவுக்குவந்த தீட்ஷித் எட்டிப் பார்க்கவில்லை, மகாத்மா காந்தி தேசத்தில் இருந்து வந்தவர். இதன்பிறகு அவர்களுடைய பத்திரிகை அலுவலகங்கள் டைனமட் வைத்து கொளுத்தப்பட்டு, அவர்கள்மீது இந்திய இராணுவம் போர் தொடுத்தது.
இங்கே நமது தியாகு சொன்னார், தூதனாக வெள்ளைக்கொடியுடன் வருபவனைச் சுட்டுக் கொல்வது எங்கள் மரபல்ல என்று ஹர்கிரத்சிங் சொன்னதையும் தேவேந்தர் சிங் சொன்னதையும் இங்கே சுட்டிக் காட்டினார். இந்திய இராணுவத் தளபதிகள் பலருக்கும் மனசாட்சி இருந்தது. ஆனால், இந்திய அரசுக்கு மனசாட்சி இல்லை. யாழ்ப்பாணத்தில் தளபதியாக கிட்டுக்கு அடுத்தபடியாக இருந்த ஜானியை, நெற்றிப் பொட்டில் குண்டு பாய்ந்தும் உயிர் பிழைத்து, ‘இது மெடிக்கல் மிராக்கிள்’ என்று அதிசயமாக உயிர்தப்பிய ஜானியை, “இங்கே இருந்து இந்திய அரசின் சார்பாக, நாங்கள் தூது அனுப்புகிறோம், உங்கள் தலைவரைப் போய்ப் பார்த்துத் தகவல் தெரிந்து வாருங்கள்” என்று இந்திய இராணுவ ஹெலிகாப்டர் விமானத்தில் ஏற்றிக்கொண்டு போய் இறக்கினார்கள். ‘என் கையில் ஆயுதம் எதுவும் இல்லை, பாதுகாப்பு வேண்டும்’ என்று அவர் கேட்டார்.
உன்னை எந்த இடத்தில் இந்திய இராணுவம் மறித்தாலும் உன் பெயரைச்சொல். நான் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட தூதன் என்று சொல். எந்தத் தொல்லையும் நேராது என்றார்கள். நம்பினார் ஜானி. இந்திய அரசல்லவா சொல்கிறது? தலைவரைச் சந்தித்துவிட்டு நான்கு நாள் கழித்து அவரும் இரண்டு புலிப்படை வீரர்களும் உடன் வந்தார்கள். குறிப்பிட்ட இடத்தில் இந்திய இராணுவம் வழி மறித்தது. அவரிடம் ஆயுதம் எதுவும் இல்லை.
இரண்டு கைகளையும் உயரே தூக்கிக்கொண்டு, நான் ஜானி..... நான் இந்திய அரசால் அனுப்பப்பட்ட தூதுவன் என்று சொன்னார். உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை சல்லடைக் கண்களாக இயந்திரத்துப்பாக்கியின் குண்டுகள் துளைக்க அந்த இடத்திலே சுட்டுக் கொன்றார்கள். காட்டுச் சுள்ளிகளைக் கொண்டுவந்து உடலைக் கொளுத்தி ஈமச்சடங்குகளைச் செய்தார்கள்.தூதனைக் கொன்றதாக கேள்விப்பட்டு இருக்கிறீர்களா - தூதனைக் கொன்றதாக இதிகாசத்தில் உண்டா? இந்திய அரசு தூதுவனைக் கொன்றது. எங்கள் கிட்டு என்ன துரோகம் செய்தார் உங்களுக்கு? இதேபோல ஒரு தைப்பொங்கல் திருவிழாவையொட்டி இலண்டனில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வரலாம் என்று ஆசையோடு வந்த அந்தத் தமிழ் மகனை நடுக்கடலில் சுற்றி வளைத்து, பன்னாட்டுக் கடல் எல்லையில் அவரைச் சாகடித்தீர்களே, நீங்கள் செய்த துரோகங்களைப் பட்டியலிட்டால், ஒன்றல்ல இரண்டல்ல எவ்வளவோ?
1987 இல் தமிழ் ஈழம் மலர்வதைத் தடுத்தது இந்திய அரசு. அன்றைக்கு வடமராச்சி சண்டையில் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடிக்கொண்டு இருந்தான் சிங்களத்துக்காரன். நடுங்கிப்போன ஜெயவர்த்தனா போபார்Þ பிரச்சனையில் சிக்கி இருந்த ராஜீவ்காந்தியை வளைத்துப்போட்டு, வஞ்சகமாக ஒப்பந்தம் என்று சொன்னான். அதுபோலத்தான் இப்பொழுதும் புலிகளுடைய கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், அவர்களுடைய கொடி பறந்து கொண்டு இருக்கிற காலத்தில், இந்த அளவுக்குக் கிளிநொச்சியில் சேதம் ஏற்பட்டதற்கு, இந்திய அரசுதான் காரணம்.
சரத் பொன்சேகாவும், கொட்டபய இராஜபக்சே என்கின்ற கயவாளிப்பயல்கள் இரண்டு பேரும் இழிவான கொலைகளைச்செய்து, ஒரு இராணுவத்தில் எவனும் செய்யக்கூடாத அக்கிரமமான கொலைகளை அராஜகங்களை செய்த கொடியவர்கள். செம்மணியில் 400 தமிழர்களின் பிணங்கள் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்டதே கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில்? நான் ஜெÜவாவில் மனிதஉரிமை ஆணையத்திடம் செம்மணிக்காக முறையிட்டவன். நிபுணர்குழுவை அனுப்பிவைக்க வேண்டும் என்று துணைத் தலைவரிடம் கேட்டு வெற்றிபெற்றவன். பெண்கள், குழந்தைகள், அப்பாவிகள் என மொத்தம் 400 பேரை சுட்டுக்கொல்வதற்கு ஏற்பாடு செய்தவன். இந்த கொட்டபய இராஜபக்சேவும் சரத்பொன்சேகாவும். இந்த இருவரும் அமெரிக்காவுக்கு ஓடிப்போனார்கள். இருவரும் அமெரிக்கக் குடி உரிமை பெற்றவர்கள். ராஜபக்சே வந்த பிறகுதான் இவர்கள் இலங்கைக்குத் திரும்பி வந்தார்கள்.
அவன்தான் பேசுகிறான். அவன்தான் சொல்கிறான், அண்ணன் நெடுமாறனை, என்னை வசைபாடுகிறான். தந்தை பெரியார் சொன்னார், நம் இன எதிரிகள் நம்மைத் திட்டினால் நாம் சரியான பாதையில் போகிறோம்; எதிரிகள் பாராட்டினால் நாம் துரோகியாகிவிட்டோம் என்றார். ஆம், சரத்பொன்சேகா அண்ணன் நெடுமாறனையும், என்னையும் இழிவுபடுத்துகிறான். புலிகளிடம் காசு வாங்கிப் பிழைக்கிறார்கள் என்கிறான். அடப்பாவி, புலிகளிடம் காசுவாங்கிப் பிழைக்கின்ற ஈனத்தொழிலை மானம் உள்ள தமிழன் நினைத்துக்கூடப் பார்க்கமாட்டான்.
அவர்களே, செத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி ஒரு குற்றச்சாட்டை அவன் சொல்கிறான். துறவியைப்போல வாழ்ந்து கொண்டு இருக்கின்ற நெடுமாறனையும் சேர்த்துச் சொன்னான். நானாவது அரசியல் உலகத்தில் இருக்கிறேன். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
ஆனால், அதே குற்றச்சாட்டை கலைஞர் கருணாநிதி சொன்னாரே? இன்றைக்குப் பேசுகிற பல தலைவர்களைக் கேட்கிறேன். விருப்புவெறுப்பு அற்று பிரச்சனைகளுக்கு வாருங்கள். அண்ணன் நெடுமாறனைப்பற்றிக் கவிதை எழுதினார். விஷத்தைக் கக்குவது அவருடைய பேனாவின் வேலை. ஈழப்புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு இருக்கக்கூடிய இனத்துரோகி என்று நெடுமாறனைச் சொன்னார். நான் சாபமிட்டுப் பழக்கம் இல்லை. ஆனால், தாங்கமுடியாத துயரத்தில் மதுரையம்பதியில் மாலை பத்திரிகைகளைப் பார்த்துவிட்டு துடித்துப்போய் சொன்னேன். ‘இயற்கை இதற்கு ஒரு தண்டனை வழங்காமல் விடாது’ என்று சொன்னேன்.
அதைத்தான் பொன்சேகா சொன்னான். கருணா சொல்கிறான். கருணா என்கின்ற கயவன் சொல்கிறான். ஆயுதக்கடத்தலில் நாங்கள் ஈடுபடுவதாகச் சொல்கிறான். இதில் பணம் பார்ப்பதாகச் சொல்கிறான். அவன் சொல்கிறானே, உங்களுக்குப் பத்திரிகை தர்மமே கிடையாதா? மனசாட்சியே கிடையாதா? அவன் சொன்னதை எதற்காக மூன்று நாட்களாக வெளியிட்டீர்கள்? எதையோ எதிர்பார்த்து, ஒரு கொந்தளிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்று அணைபோடுவதற்காக எழுதுகிறீர்களா?
இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியில், மத்திய அரசின் கொள்கைதான் என்னுடைய கொள்கை என்று இதுவரை 20 தடவை சொல்லி இருக்கிறார் முதல் அமைச்சர் கலைஞர் கருணாநிதி. நாங்கள் குற்றம் சாட்டுகிறோம், ‘உங்களுக்குத் தெரிந்து உங்கள் ஏற்பாட்டில்தான் ஆயுதம் கொடுத்தார்கள் - ரேடார் கொடுத்தார்கள் - பணம் கொடுத்தார்கள் - ஆள் அனுப்பினார்கள் - நிபுணர்கள் அனுப்பினார்கள். இப்பொழுது இந்திய விமானப்படையின் விமானிகளும் போய் இருக்கிறார்கள்.
கடைசியாக எனக்கு வந்து இருக்கக்கூடிய செய்தி, அடர்ந்த காடுகளுக்குள் நடவடிக்கை எடுக்கக்கூடிய இராணுவப் பிரிவினர் அனுப்பப்பட்டு இருக்கிறார்கள் இந்தியாவில் இருந்து. இந்தியாவினுடைய உளவுப்பிரிவு சாட்டிலைட் கேமராவில் முல்லைத் தீவுப் பகுதியைப் படம் எடுத்து சிங்கள இராணுவத்திடம் ஒப்படைத்து இருக்கிறது என்று நான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன்.
இன்றைக்கு 6 இலட்சம் தமிழர்கள் முல்லைக் காட்டில் சிக்கிக் கிடக்கிறார்கள். கிளிநொச்சியில் இருந்து வெளியேறிவிட்டார்கள். சிங்கள இராணுவம் வெற்றிபெற்றதாகக் கொக்கரிக்கின்றான் இராஜபக்சே. உன்னைவிட ஹிட்லர் கொக்கரித்தான். ஸ்டாலின் கிராடைப் பிடித்துவிட்டோம், லெனின்கிராடைப் பிடித்துவிட்டோம் என்று காலிக் கட்டடங்களை வெறிச்சோடி கிடந்த நகரங்களைப் பார்த்து, ருக்ஷ்யர்கள் பயந்து ஓடிவிட்டார்கள் எனச் சொன்னான். பருவகாலம் மாறியது. அதற்குப்பிறகு ஹிட்லரின் நாஜிகளுக்கு அங்கேயே சமாதி கட்டினார்கள்.
அதைப்போல இந்த ராஜபக்சேயின் இராணுவத்துக்குத் தமிழ் மண்ணில் சமாதிகட்டப்பட வேண்டும். நல்லசெய்தியை விரைவில் எதிர்பாருங்கள். அடிப்பான் நமது ஆள். (பலத்த கைதட்டல்) இப்பொழுது கைதட்டுகிறீர்களே இதுதான் தமிழனின் உணர்ச்சி. இதுதான் தமிழகம் முழுவதும் இருக்கின்ற உணர்ச்சி. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் அல்லவா. நம்ம கிராமத்துக்காரன் இன்னொரு கிராமத்துக்காரனுடன் சண்டையிட்டால் என்ன இருந்தாலும் நம்ம ஆள் வெற்றிபெற வேண்டும் என்று சொல்கிறான் அல்லவா. அதுபோலத்தான். ஆறரைக்கோடி மக்களும் பொங்கி எழுந்தால் மூச்சுவிட்டால் நிற்பானா சிங்களத்துக்காரன்?
இப்போது இருப்பதுபோல, அந்தக் காலத்தில், இணையதளம் கிடையாது - கைத்தொலைபேசி கிடையாது. வேகமாக செய்தியைப் பரப்புகின்ற சாதனம் கிடையாது - ஆனால், 40 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு படம் உலகம் முழுமையும் பத்திரிகைகளில் முதல்பக்கத்தில் வந்தது. ஒரு மூன்று வயது குழந்தை மேனியில் எந்த ஆடையும் இல்லாமல் பிறந்த கோலத்தில் அலறிஓடித்துக் கொண்டு பதறி ஓடுகிறது. பின்னாலே குண்டுகளை வீசுகிறார்கள் அமெரிக்கர்கள். கட்டடங்கள் இடிந்து தீப்பற்றி எரிகின்றன. இது ஓவியம் அல்ல, உண்மையான படம்.
தாய் தந்தையைப் பறிகொடுத்து இருக்கலாம். வீட்டை இழந்திருக்கலாம். அந்தக் குண்டு சத்தத்துக்கு மத்தியில் நடுங்கிபதறி ஒடுங்கி அலறிக்கொண்டு அந்தக் குழந்தை ஓடுகிற காட்சியை ஒருவர் புகைப்படம் எடுத்து விட்டார். அந்த முகத்தில் தெரிகின்ற பதட்டம் - பீதி - கிலி தத்ரூபமாக இருக்கிறது. இந்தப் புகைப்படம் உலக ஏடுகளில் வந்தது. உலகத்தின் மனசாட்சிகளின் கதவு தட்டப்பட்டது. சர்வதேச சமுதாயம் கொதித்து எழுந்தது. இந்தக் குண்டுகள் வீசப்பட்ட இடம் வியட்நாம். ஓடிய குழந்தை வியட்நாம் குழந்தை. இந்தச் செய்தியும் புகைப்படமும் அமெரிக்க நாட்டில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது அமெரிக்க அரசை எதிர்த்து. அமெரிக்க இராணுவத்தை எதிர்த்து. மையிலாயில் 60 பேரைச் சுட்டுக்கொன்ற அந்தத் தளபதியைக் கூண்டில் நிறுத்துவதற்கு இதுவே காரணமாயிற்று.
ஒரு குழந்தை பதறி அழுதுகொண்டு ஓடுகின்ற காட்சியைக்கண்டு அகிலத்தின் மனசாட்சி விழித்ததே, நான் வேதனையோடு கேட்கிறேன். ஒரு யுத்தகளத்தில் இருதரப்பினரும் சண்டையிட்டுக் கொண்டாலும் காயமுற்றவர்களுக்கு மருத்துவசிகிச்சை செய்வதற்கு போடுகிற கூட்டம்தான் செஞ்சிலுவைச் சங்கம். இருதரப்பில் யார் இறந்துபோனாலும் அவர்களை கெளரவமாக மரியாதையாக அடக்கம் செய்வதுதான் வீரமரபு.
பாஞ்சாலங்குறிச்சிக்குப் பக்கத்தில் கயத்தாறுக்கு வந்து பாருங்கள். வெள்ளைக்காரச் சிப்பாய்களில் செத்துப்போனவர்களுக்கும் கட்டபொம்மன் கல்லறை கட்டி இருக்கிறான். ஸ்ரீரங்கபட்டணத்துக்குப் பக்கத்தில் போய்ப்பாருங்கள். அங்கு இருந்த மைசூர்புலி திப்புவை எதிர்த்துப் போரிட்ட தளபதிகளின் சடலத்தையும் மரியாதையாக அடக்கம் செய்து திப்புசுல்தான் கல்லறை கட்டிவைத்து இருக்கிறான்.
அதைப்போல ஈழத்திலும், உரிமை கொண்டாடாத சிங்கள இராணுவத்தினரின் உடல்களையும் முறையாக அடக்கம் செய்து மரியாதை செய்தவர்கள் விடுதலைப் புலிகள். ஆனால், என் அன்புக்கு உரியவர்களே, சிலதினங்களுக்கு முன்னால் ஒரு கொடூரமான காட்சி. அந்த புலிப்படையில் இருக்கக் கூடிய நமது வீரநங்கைகள் கற்புக்கரசி கண்ணகியின் வழிவந்த நமது மாதர்குல மணிவிளக்குகள். மானம் காப்பதற்காக மறத்தமிழச்சிகளாக போர்க்களத்திற்குச்சென்று போராடக்கூடிய வீராங்கனைகள்.
கற்பையும், மானத்தையும் உயிரினும் மேலாகப் போற்றக்கூடியவர்கள் யுத்தக்களத்தில் செத்துப் போனார்கள். குண்டு பாய்ந்து செத்துப்போனார்கள். அப்படி செத்துப் போனவர்களை அவர்கள் பிணமாக விழுந்த உடன் ஒரு சேவலை வெட்டுகிறபோது தலைதுண்டானதற்குப் பிறகும் இரண்டு நிமிடம் அந்த சேவலின் உடல் துடித்துக் கொண்டு இருக்கும். ஒரு ஆட்டுக்கிடாயை வெட்டியபிறகும் அதன் உடல் துடித்துக் கொண்டு இருக்கும். இந்த உடம்பில் இருந்து உயிர்போனபிறகும் ஒருசிலநிமிடங்கள் வெப்பம் இருக்கும்.
இறந்துபோன உடனே அந்தப் பெண்களின் உயிரற்ற உடல்கள்மேலே இருந்த புலிப்படைச் சீருடைகளை முழுமையாக அப்புறப்படுத்தினார்கள். கத்தியால் உடைகளைக் கிழித்து எறிந்தார்கள். நிர்வாணப்படுத்தினார்கள். என் அன்புக்கு உரியவர்களே, ஹிட்லரின் டாசோ சித்ரவதை கேம்ப்பில் ஒருநாள் முழுக்க இருந்து பழைய காட்சிகளைப் பார்த்து இருக்கிறேன். வாஷிங்டனில் இருக்கக்கூடிய பேரழிவு அருங்காட்சியகத்தை மணிக்கணக்காக இருந்து பார்த்து இருக்கிறேன். பல்லாயிரக் கணக்கானவர்களை நிர்வாணமாகபோட்டு அவர்களை மொத்தமாகக்கொன்று, அவரது உடல்களை மொத்தமாக குவியல் குவியலாக போடப்பட்டு இருக்கிற காட்சியை வீடியோவில் பார்த்து இருக்கிறேன்.
அங்குகூட ஹிட்லரின் நாஜிகள் இந்தக்கொடுமையைச் செய்யவில்லை. உயிரற்ற தமிழ்த் தங்கைகளின் சடலங்களில் இருக்கின்ற சீருடைகளை அப்புறப்படுத்திவிட்டு அதோடு நிறுத்தாமல், மிருகங்கள் இந்தக் கொடுமையைச் செய்யாது. என்னால் சொல்ல முடியவில்லை; இங்கு பெண்கள் அதிகம் இல்லை. இருப்பினும் சொல்ல என் நா கூசுகிறது. சொல்ல முடியவில்லை. உலகத்தில் எங்கும் நடக்காத கொடுமையை அந்தத் தங்கைகளின் உடம்பில் சிங்கள இராணுவ வெறியர்கள் செய்தார்கள். இதை மனசாட்சி உள்ள ஒருவன் படமாக எடுத்து இணையதளத்திற்கு அனுப்பிவிட்டான்.
சர்வதேச சமுதாயமே எங்கள் தமிழச்சிகள், தமிழர்கள் மனித சமுதாயத்திலே இல்லையா? ஏ, உலகமே! உன் கண்கள் குருடாகிவிட்டதா? செவிகள் செவிடாகிவிட்டதா? இவ்வளவு கொடூரமான கொலைகளைச் செய்கின்ற சிங்கள அரசுக்குத் துணைபோகின்ற கேடுகெட்ட துரோகத்தைச் செய்கின்ற மன்மோகன் சிங் அரசுக்கு இந்திய அரசுக்கு மன்னிப்பே கிடையாது தமிழர்களிடத்தில்!
வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.