ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Thursday, March 5, 2009

ஈழத்தில் நடப்பது என்ன?’... வைகோ எழுச்சி உரை

‘ஈழத்தில் நடப்பது என்ன?’... வைகோ எழுச்சி உரை

தொன்மைத் தமிழுக்குத் தொண்டு ஆற்றி, இசைத்தமிழுக்கு மகுடம் சூட்டிய அண்ணாமலை அரசர் பெயரால் அமைந்து இருக்கின்ற இந்த மன்றத்தில், இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொள்வதற்கு அனுமதி கொடுத்த அண்ணாமலை மன்ற நிர்வாக உறுப்பினர்களுக்கு, முதலில் என் இதயம் பொங்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஐப்பசித் திங்களின் மழைத் துளிகளுக்கு மத்தியில், இந்த அரங்கம் நிறைந்து அரங்கத்துக்கு வெளியேயும் ஆயிரம் ஆயிரமாக வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கின்ற தமிழ்ப்பெருங்குடி மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈழத்தில் நடப்பது என்ன? ‘உப்புக்கரிக்கும் கடல் நீர் தமிழர்கள் சிந்திய கண்ணீர்’ என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் மணிவாசகங்களை முன்னிறுத்தி, இந்தக் கருத்து மேடையை நாங்கள் அமைத்து இருக்கின்றோம். இருதயத்தைக் குத்திக் கிழிக்கின்ற இரத்தமயமான சோகக்காட்சி ஒன்றை இந்த மேடையின் பின்புறத்தில் சித்திரித்து இருக்கின்றோம்.

இந்த நிகழ்ச்சி தொடங்கிடும் வேளையில் கிளிநொச்சியில் நடத்தப்படுகின்ற இலங்கை இராணுவத் தாக்குதல், வான்படைத் தாக்குதலால் ஏற்கனவே தங்கள் வீடு வாசலை இழந்து யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறி, அதன் பின்னர் வவுனியாவை விட்டும் வெளியேறி, கிளிநொச்சிப் பகுதியில் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற பகுதி மக்களை கொன்று குவிக்கின்ற கொடுமையை நடத்திக்கொண்டே இரத்தவெறி பிடித்த இரஜபக்சே, ‘நீங்கள் கிளிநொச்சியை விட்டு வெளியேறுங்கள்; பாதுகாப்பான இடங்களுக்கு நாங்கள் வழியமைத்துத் தருகிறோம்; நீங்கள் அங்கு சென்று வசித்துக் கொள்ளலாம்; உங்கள் உயிருக்குப் பாதுகாப்பு உண்டு.இல்லையேல் நீங்கள் அனைவரும் மடிய நேரிடும்’ என்ற வகையில் விடுக்கப்பட்ட எச்சரிக்கையைக் கால் தூசாக நினைத்து, நாங்கள் இந்த மண்ணின் மக்கள்; இது எங்கள் தாயகம். எங்களின் உயிர்கள் போவதாக இருந்தாலும் உன்னுடைய கொடிய கட்டளைக்குக் கீழ் படிந்து போகத் தயாராக இல்லை. இங்கே இருக்கக்கூடிய விடுதலைப் புலிகள் எங்கள் பிள்ளைகள். எங்கள் கருவறை சுமந்த பிள்ளைகள். அந்த உணர்வோடு, ஒவ்வொரு ஈழத்துக் குடும்பத்திலும், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பிள்ளை அல்லது ஒரு நங்கை விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருக்கிறார்கள்.
‘புலிகள் வேறு தமிழர்கள் வேறு அல்ல; விடுதலைப் புலிகள்தான் - காவல் அரணாக இருக்கக்கூடிய அவர்கள்தான் தமிழர்களின் பாதுகாப்பு. அவர்கள் ஏந்தி இருக்கின்ற ஆயுதம் ஒன்றுதான் தமிழர்களின் நலனுக்குப் பாதுகாப்பு. இது வரலாற்று உண்மை. இந்த நிகழ்ச்சியில் கிளிநொச்சியின் அவலக்காட்சிகளைக் கண்டு கண்ணீர் சிந்தினீர்கள். பிஞ்சுக் குழந்தைகள், பச்சை இரத்தத்தில் துடிக்கத்துடிக்கத் தூக்கிச் செல்லப்படுகின்ற காட்சிகளைக் கண்டு உங்கள் மனம் பதறினீர்கள்.

வீடுவாசலை இழந்துவிட்டு, கொட்டும் மழைக்கு மத்தியில், காடுகளில் மரக்கிளைகளுக்குக் கீழே பசியோடும், நோயோடும் போராடிக் கொண்டு இருக்கின்ற நமது தமிழ்ச் சொந்தங்களைக் கண்டு கலங்கினீர்கள். இந்தக் காட்சிகளைக் கண்டதற்குப்பிறகு விடியலின் நம்பிக்கையாக, அந்த மண்ணுக்கு விடுதலை பெற்றுத் தருகின்ற ஒருபெரும் இயக்கமாக, உலகம் இதுவரை சந்தித்திராத சாதித்திராத, கண்டும் கேட்டிராத சாகசங்களை மயிர்க்கூச்செறிகின்ற வீரகாட்சிகளை அரங்கேற்றிக் கொண்டு இருக்கின்ற ஒரு இயக்கத்தை நடத்திக்கொண்டு இருக்கின்ற விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய தலைமையில், ‘எங்கள் மண் விடுதலை பெறும்; தமிழ் ஈழம் மலரும்; விடுதலைக்கொடி பறக்கும்; உலக வரைபடத்தில் ஒரு நாடு எழும்’ என்ற நம்பிக்கையோடு அவர்கள் இருப்பதை அந்தக் குறுந்தகட்டின் இறுதிக் காட்சியில் கண்டீர்கள்.

அதற்கு அடுத்து நார்வே நாட்டில், பீட்ஆர்ன்ஸ்டாட் என்கின்ற அந்த அம்மையார், 3 ஆண்டுகள் அங்கே தங்கி இருந்து, மரணத்துக்கு அஞ்சாமல் சில இடங்களுக்கு உள்ளே சென்று, பல இடங்களில் அரசாங்கத்தின் கெடுபிடி நடவடிக்கைக்கும் ஆளாகி, படம்பிடித்த காட்சிகளைப் பார்த்தீர்கள். அந்த அம்மையார் தமிழச்சி அல்ல. நார்வே நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு இதில் விருப்புவெறுப்பு எதுவும் கிடையாது.

அருமைச் செய்தியாளர்கள், நண்பர்கள் இருப்பதால் சொல்கிறேன். நடைபெற்ற சம்பவங்கள் எதையும் மறைக்காமல் அவற்றை நம் முன்னால் நிறுத்தி இருக்கிறார் அந்த அம்மையார். தலைப்பு என்ன? கரும்புலிப் படையில் தர்ஷிகா என்கின்ற ஒரு ஈழப்பெண் களத்திலே நிற்கிறாள். அவள் ஏன் அந்தப் படையில் சேர்ந்தாள்? இதைச் சித்தரிப்பது தான் இந்தப் படம். ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்த தர்ஷிகா, அவளோடு சேர்ந்து களம் ஆடுகின்ற இன்னொரு இளநங்கை புகழ்ச்சுடர். இந்த இருவரையும் முன்னிறுத்துகின்ற குறும்படத்தை நீங்கள் பார்த்தீர்கள்.

இதில் சொல்லப்பட்ட செய்தியை, உங்களுக்கு நினைவூட்டுகிறேன். என் மகள் 11 வயதில் அவள் திடீரென்று காணாமல் போய்விட்டாள் என்று பெற்ற தாய் அந்தோணியா என்கின்ற அந்த அம்மையார் வழிந்தோடும் கண்ணீரைக் கைக் குட்டையால் மறைத்துக் கொண்டே பேசுகிறார். ஒரு அமைதியான குடும்பம் எங்கள் குடும்பம். மகிழ்ச்சியாக, குதூகலமாக இருந்த குடும்பம், எங்கள் குடும்பம். அந்தக் குடும்பம் சிதறிச் சின்னாபின்னமாகி விட்டது. வானத்தில் இருந்து சிங்களவன் குண்டுவீசினான். எங்கள் தேவாலயங்கள் நொறுக்கப்பட்டன; எங்கள் வீடுகள் நொறுக்கப்பட்டன; இந்தக் கொடுமைகள் ,உயிரிழப்புகளைச் சொல்லிவருகிறார்.

தர்ஷிதாவின் தந்தை, என்னுடைய கணவர் அஞ்சல் அலுவலகத்திலே ஊழியராக வேலை பார்த்தார். ஒருநாள் காலையில் வேலைக்குச் சென்றார். பகலில் செய்தி வந்தது. அன்று சிங்கள விமானங்கள் வீசிய குண்டு வீச்சில் என் கணவர் கொல்லப்பட்டு விட்டார். முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் அங்கே கொல்லப்பட்டார்கள். தந்தைமீது அதிகபாசம் வைத்து இருந்த மகள் இதனால் பாதிக்கப்பட்டாள் என்று அவர் சொல்கிறார்.

அடுத்து தர்ஷிகாவிடத்தில் இந்தப் பின்னணியைக் கேட்கிறபோது, அந்தப் பெண் சொல்கிறாள்: ‘சிறு குழந்தையாக நானும் என் அண்ணனும் இருக்கிறபோது இராணுவத்தினர் சுற்றி வளைத்தார்கள். எங்கள் வீடுகளை, எங்களை, கொதிக்கின்ற வெயிலில், நெருப்பாகச் சுடுகின்ற மணலில் போட்டார்கள். சுடு மணலில் நெருப்பு மணலில் நாங்கள் துவண்டுதுடிப்பதைக் காண இயலாமல், என் தாய் ஒரு துணியைப் போட்டு அதன்மேல் எங்களை அந்த வெயில் தாக்கிவிடக்கூடாது என்பதற்காகப் போட்டார்கள்.
கமாண்டர் இராணுவத்தின் அந்தப் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்குகிறவருக்கு மேல் நிழலுக்குக் குடை பிடித்துக் கொண்டு இருந்தார்கள் சிங்களச் சிப்பாய்கள். ஆனால், தகிக்கின்ற சுடுமணலில் இருந்து எங்களைக் காக்க என் தாய் போட்ட துணிகளைப் பிடுங்கி எறிந்து, மீண்டும் எங்களைச் சுடுமணலில் உருட்டினார்கள். துடித்தோம். நெருப்பில் வெந்தோம். அழுவதைத்தவிர வேறு எதையும் செய்யமுடியவில்லை என் தாய். இந்த நிகழ்ச்சி என் மனதை மிகவும் பாதித்தது.
ஒரு கட்டத்தில் நானும், என் அண்ணனும் தப்பிச் செல்கிறபோது, எங்களை இராணுவம் வேட்டையாடி வருகிறது. சிங்களச் சிப்பாய்கள் சுடுகிறார்கள். நாங்கள் இன்னொரு இடத்துக்குப் போக முடியவில்லை. அப்போது, எங்களைப் பாதுகாக்கத் தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்துவந்த புலிப்படை வீரர்கள் எதிர்த்துச் சுட்டார்கள். அப்பொழுதுதான் முதன்முதலாக நம்மைப் பாதுகாக்க இந்த அண்ணன்மார்கள் இருக்கிறார்கள் என்று நான் நினைத்தேன்.

தோழர்களே, நெருப்பாகப் பற்றி எரிகின்ற சுடுமணலில் உருட்டிவிடப்பட்ட அந்தச் சின்னஞ்சிறு குழந்தை, 12 வயதானபோது காட்டுக்குப் போகிறாள். அவள் ஒரு முடிவு எடுத்துப் போகிறாள். நான் தேவாலயத்துக்கு சென்று, ஒரு கன்னியாஸ்திரியாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். பைபிளை வாசித்து, ஜெபித்து அமைதியாக சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன் என்கிறாள். கர்த்தரின் வாசகங்களை இதயத்தில் ஏந்திக்கொண்டு சகமனிதர்களை நேசிக்கின்ற கருணைமிக்க வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒரு பெண். அதுவே தன்னுடைய வாழ்க்கையின் இலட்சியமாக சின்னஞ்சிறுவயதில் இருந்து உணர்வுகளைக் கொண்டு இருந்த இளம்பெண் தர்ஷிகா.

அவர் இந்தக் கொடிய சம்பவங்களைப்பற்றி விவரிக்கும்போது, எந்தத் தேவாலயத்துக்குச் சென்று நான் ஜெபித்தேனோ, வானத்தில் இருந்து சிங்கள இராணுவ விமானங்கள் தொடர்ந்து குண்டுவீசி அதில் எண்ணற்றவர்கள் படுகொலை செய்யப்பட்ட வேளையில் தப்பி ஓடி வந்தவர்கள் தேவாலயத்துக்கு உள்ளே தஞ்சம் புகுந்தார்கள். அந்தத் தேவாலயத்தின்மீது குண்டுவீசப்பட்டது. தேவாலயம் இரத்தக் காடாயிற்று. அந்தத் தேவாலயத்துக்கு உள்ளே வந்தவர்கள் எல்லாம் பிணமானார்கள். இதையும் நான் பார்த்தேன்’ என்கிறாள்.

கொடிய மிருகங்களைவிட அரக்கக்குணம் கொண்ட சிங்களக் காடையர்கள் தேவாலயத்தைக்கூட விட்டு வைக்கவில்லை என்ற நிலையில், அவள் இந்த முடிவுக்கு, ஆயுதம் ஏந்துகின்ற, உயிரைத் தருகின்ற, மரணத்துக்கு அழைப்பிதழ் கொடுத்து நச்சுக் குப்பிகளை கழுத்தில் கட்டிக்கொண்டு, சமர்க்களத்துக்குச் செல்கின்ற இந்த முடிவை எடுப்பதற்கு என்ன பின்னணி என்பதை விளக்குகின்ற வகையில் இதைச் சொல்கிறாள்.
இதே காட்சிதான், இதே சம்பவம்தான்: நெருப்பாகக் கொதிக்கின்ற சாலையில் கொட்டப்பட்ட தார். அந்தத்தாரில் நெருப்பு வைக்கப்பட்டு அந்தத் தார் கொதிக்க கொதிக்க உலைக்களமாக இருந்த இடத்தில், தமிழச்சியின் பிள்ளைகளை அதில் தூக்கி வீசினான் சிங்களத்துக்காரன். அந்தக் குழந்தைகள் தாரில் துடித்தன. இந்தக் காட்சியைக் கண்டான் ஒரு 14 வயதுச் சிறுவன்.
இந்த இரண்டு பிள்ளைகளைக் கொண்டுவந்து சுடுநெருப்பைப்போலத் தாரில் கொண்டு வந்து போட்டு இருக்கிறானே சிங்களத்துக்காரன், சிங்களக் காவல்துறை என்ற எண்ணம்தான், இந்தக் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற உணர்வை, அந்தச் சிறுவனுக்குள் விதைத்தது. அன்றைக்கு அந்தக் காட்சி நடைபெற்ற இடம் வல்வெட்டித்துறை. அதைக் கண்டவர்தான் விடுதலைப்புலிகளின் தலைவராக இருக்கின்ற பிரபாகரன்.
அதே காட்சியைத்தான் தர்ஷிகா பார்க்கிறாள். அந்தத் தர்ஷிகா இந்த அமைப்பில் சேர்கிறாள். அதற்குப்பிறகு, எங்கள் உயிர்கள் போய்விடும் எங்களுக்கு நினைவகம் எப்படி அமையும் என்பதை சொல்கிறார்கள்.
எங்களுடைய படை வெற்றி பெற்று அந்த இடத்தைக் கைப்பற்றி எங்களுடைய ஆளுமை வந்தால், எங்களுக்கு அங்கே ஒரு கல்லறை எழலாம். இல்லையேல் நாங்கள் எதிரியின் பிரதேசத்துக்கு உள்ளே மடிந்தால், எங்களுக்காக நினைவகம் அமைக்கப்படுகின்ற தாயக இடத்தில், எங்களுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படலாம். அல்லது வெறும் படமாக நாங்கள் இருப்போம்’ என்று குறிப்பிட்டு இருக்கிறாரே அந்த உணர்வோடு செல்லக்கூடிய அந்தப் பிள்ளைகள், மாவீரர்களின் துயிலகத்தைப் பார்த்தீர்கள். அவர்கள் எல்லாம் இந்த மண்ணுக்காகத் தங்கள் இன்னுயிர்களைத் தந்தவர்கள்.
அப்படித் தங்கள் உயிர்களைத் தந்து இருக்கக்கூடிய அவர்கள், எதற்காக ஆயுதம் ஏந்தினார்கள்?
அவர்கள் பயங்கரவாதிகள் என்று சித்தரிக்கப்படு கிறார்களே, எங்களுடைய அவைத்தலைவர் கூறியதைப்போல, ஏன் ஆயுதம் ஏந்தினார்கள் என்ற கேள்வியை அவர் இங்கே எழுப்பினார்கள். வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட சில வாசகங்களை இங்கே நான் கூற விரும்புகிறேன். ஏனெனில், நாங்கள் வன்முறைமீது காதல் கொண்டவர்கள் அல்ல. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வன்முறையை நாடாத இயக்கம். தொடங்கிய காலத்தில் இருந்து எந்தக் காலத்திலும் நாங்கள் வன்முறையில் ஈடுபட்டவர்கள் அல்ல.
ஆனால், எது வன்முறை? எது பயங்கரவாதம்? எது உரிமைப் போராட்டம்? இதை யார் தீர்மானிப்பது? இன்றைக்கு உலகத்துக்கு ஆலோசனை சொல்லிக் கொண்டு இருக்கின்ற அமெரிக்க நாட்டுக்காரன், சர்வதேச பயங்கரவாதத்தை எல்லாம் நான் அழிக்கப் போகிறேன் என்று கொக்கரிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம். அந்த அமெரிக்கா இன்றைக்கு அங்கே வசிக்கக் கூடியவர்களின் தாயகம் அல்ல. ஐரோப்பிய நாடுகளில் இருந்து, அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல்லில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபோனவர்கள், மிருகங்களைவிடக் கேவலமாக ஆப்பிரிக்கக் கண்டத்து நீக்ரோக்களைக் கட்டி இழுத்துக்கொண்டு போனார்களே, அந்த அமெரிக்க மண்ணின் மைந்தர்களான பழங்குடியின மக்கள், இன்று தேடினாலும் காணமுடியாத இடத்தில் இருக்கிறார்களே?
இப்படிக் ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து அமெரிக்காவிற்குக் குடிபோனவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற இடத்தில் பிரித்தானியம் இருந்தது, இங்கிலாந்து இருந்தது. அலைகளை ஆட்சி செய்வது பிரித்தானியம் என்று அந்த சாம்ராஜ்யம் சொன்னபோது, இந்தப் பிரித்தானியத்தின் கட்டுப்பாட்டுக்கு உள்ளே நாங்கள் இருக்க விரும்பவில்லை சுதந்திரமாக இருக்க விரும்புகிறோம் என்று ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் விடுதலைப்போர் நடத்தினார்களே, நான் கேட்கிறேன், அவர்கள் அகிம்சை வழியிலா போராடினார்கள்?
எது பயங்கரவாதம்?
பாஸ்டன் துறைமுகத்தில் கப்பலில் இருந்த தேயிலையைக் கடலில் கொட்டிப் போர் முழக்கம் செய்தார்களே, அவர்கள் ஆயுதம் ஏந்தித்தானே போராடினார்கள்? ஆக, அமெரிக்காக்காரன் தன் நாட்டைவிட்டுக் குடியேறிப்போய்ப் பிழைக்கப்போன இடத்தில் நாடாக்கிக் கொண்ட ஒரு பகுதியை, தங்கள் சுதந்திர நாடாக ஆக்கிக் கொள்வதற்கு ஆயுதம்தானே ஏந்தினார்கள்? அது போற்றப்படுகிறது வரலாற்றில். அமெரிக்க சுதந்திரப் போராட்டம். அதைப் பயங்கரவாதம் என்பாயா? நீ துப்பாக்கி ஏந்தவில்லையா? உனக்கு உரிமையில்லாத மண்ணிலே அதைச் சொந்தமாக்கிக் கொள்ள நீ துப்பாக்கி ஏந்தலாம்; உன் பாட்டனுக்குப் பாட்டன் முப்பாட்டனான தமிழன், பத்தாயிரம் ஆண்டுகளாக இருந்த மண்ணைத் தங்கள் மண்ணாக்கிக் கொள்ள அவன் துப்பாக்கி ஏந்தக்கூடாதா? எது பயங்கரவாதம்?
மாவோ நடத்திய படை ஆயுதம் ஏந்திய படை. அவர்கள் சியாங்கே சேக்கை விரட்டுவதற்கும் ஜப்பானியர்களை விரட்டுவதற்கும் ஆயுதம் ஏந்தினார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வியட்நாமில் ஹோசிமின் தலைமையில் வியட்நாம் வீரர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.
இவற்றை எல்லாம் சொல்கிறபோது, இன்றைக்கு அகிம்சாவாதிகளின் வரிசையிலும் போற்றப்படுகின்ற ஒரு மாமனிதனின் வாசகத்தை இங்கே நினைவூட்ட விரும்புகிறேன்.
‘‘வன்முறையே வடிவமாகக் கொண்டு இருக்கின்ற ஒரு அரசை எதிர்த்து நாங்கள் நிராயுதபாணிகளாகத்தான் போராடுவோம்; ஆயுதம் ஏந்தாமல் போராடுவோம் என்று முடிவெடுத்துப் போராடுவது தற்கொலைக்குச் சமம். இலட்சியத்துக்கு அதுவே புதைகுழி அமைக்கும்; முற்றாக எதிரிகளிடம் சரணடைய வைத்துவிடும். இயக்கம் இலட்சியம் என்ற கப்பல், அரச வன்முறை என்கின்ற பாறையில் மோதி நொறுங்கிப் போகும். ஆகவே, வன்முறையை எதிர்த்து வன்முறை. அரச வன்முறையை எதிர்த்து மக்கள் வன்முறை. எதிர்ப்புரட்சியாளர்களின் ஆயுதங்களை எதிர்த்து, புரட்சியாளர்களின் ஆயுதங்கள். வன்முறையின்மீது காதல் கொள்கிறவனும் உயர்ந்தவனல்ல என்று கருதினால், ஆயுதத்தைக்கண்டு நாணிக்கோணி ஒளிகிறவனும் கோழைத்தனமானவன். அங்கமெல்லாம் ஆயுதம் தரித்து இருக்கக்கூடிய ஒரு அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு, நாங்கள் இதுவரை கையாண்ட அகிம்சை வழிகளைக் கைவிட்டுவிட்டு நாங்கள் ஆயுதம் ஏந்த முடிவு செய்துவிட்டோம்’’
என்று நீதிமன்றத்தில் சொன்னவர் நெல்சன்மண்டேலா.
அவருடைய ஆப்பிரிக்க தேசிய இயக்கத்தில் ஆயுதப்படை உருவாக்கப்பட்டது. ‘தேசத்தின் ஈட்டி’ என்ற பெயரில். அதற்கு அவரைத் தலைவராக ஆக்கினார்கள். இன்றைக்கு நெல்சன் மண்டேலாவை உலகம் போற்றுகிறது.
பகத்சிங் நூற்றாண்டு இப்பொழுதுதான் முடிந்தது. கடந்த 7 ஆம் தேதி. அவர் என்ன சொன்னார்? அவர்கள், ‘ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக் அசோசியஷன்’ என்ற ஒரு படைப்பிரிவை உருவாக்கினார்கள். அது ஆயுதப் போராட்டம் நடத்துகின்ற பிரிவு. சந்திரசேகர ஆசாத்தை அதற்குத் தலைவராக ஆக்கினார்கள். சாண்டர்சைச் சுடுவதற்கு பகத்சிங் கையில் துப்பாக்கி ஏந்தினான். குண்டுகளை செலுத்தினான். அவன் வன்முறைமீது காதல் கொண்டு அதைச் செய்யவில்லை.
இந்தப் பின்னணியை நான் கூறுவதற்குக் காரணம்; 50 ஆண்டுக்காலப் போராட்ட வரலாற்றில், பிரிட்டிக்ஷ்காரன் 1948 ஆம் ஆண்டு இலங்கைக்குச் சுதந்திரம் என்று சொல்லி, தமிழர்களைச் சமமாக நடத்துவார்கள் என்ற தவறான நம்பிக்கையில், சிங்களவர் கையில் அரசை ஒப்படைத்துவிட்டுப் போனானே, அன்று முதல் தொடங்கியது துயரம்.
ஈழத்தமிழர்கள் என்பவர்கள் அந்த மண்ணின் மைந்தர்கள் என்பதும், அவர்கள் தனி அரசு கண்டு வாழ்ந்தவர்கள் என்பதும் வரலாற்று உண்மைகள். தனி அரசு கண்ட அந்த மக்களை, நாயினும் கேவலமாக நடத்தத் திட்டமிட்டுச் செய்து வந்து இருக்கின்ற கொடுமைகளின் உச்சகட்டமாக, இப்பொழுது உலக நாடுகளின் ஆயுதங்களைப் பெற்று, உரிமைப்போர் நடத்துகின்ற விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துவிட வேண்டும் என்று இரஜபக்சே திட்டமிட்டு அவர்கள்மீது தாக்குதல் நடத்துகின்றான்.
இந்த மேடையில் நான் எழுதிய ஒரு புத்தகத்தை அண்ணன் அவர்கள் வெளியிட்டார்களே, அந்தப் புத்தகத்துக்குத் தலைப்பு, ‘I Accuse’ நான் குற்றம்சாட்டுகிறேன் என்று தந்து இருக்கிறேன்.யாரைக் குற்றம் சாட்டுகிறேன்?
இந்திய அரசைக் குற்றம் சாட்டுகிறேன்.
பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு நான் எழுதிய 24 கடிதங்கள், இந்த நூலில் இருக்கின்றன. ஒன்பது கடிதங்கள், நேரில் நான் அவரைச் சந்தித்து, இருபது முப்பது நிமிடங்களுக்குக் குறையாமல் முறையிட்டு மன்றாடி எடுத்துச்சொல்லி, கோரிக்கையாக முன்வைத்தவை; மற்றவை அவருக்கு நான் எழுதிய கடிதங்கள்.
இவற்றை நான் புத்தகமாகத் தொகுத்து வெளியிட்டதற்குக் காரணம். இன்று ஏற்பட்டு இருக்கக்கூடிய நிலைக்குக் காரணமான மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இப்பொழுது மூன்று நாட்களாக இராணுவத் தீர்வு கூடாது என்று நாங்கள் சொல்லி வந்து இருக்கிறோம் என இந்திய அரசுத் தரப்பில் சொல்கிறார்களே, அதிலும் எகத்தளமாக அலட்சியமாக, பொத்தாம் பொதுவாக வெளியுறவுச் செயலாளர் சிவசங்கரமேனன் பேசுகிறாரே, நேற்றையதினம் தொலைக்காட்சியில் அவர் கருத்தைச் சொல்கிறாரே, அப்படியானால் இராணுவரீதியான தீர்வு கூடாது, இது இந்திய அரசின் நிலைப்பாடு.
இராணுவரீதியான தீர்வு கூடாது என்று பிரணாப்முகர்ஜி சொல்கிறார். இரஜபக்சேவிடம் மன்மோகன்சிங் வலியுறுத்துகிறார். அப்படியானால், இராணுவரீதியான தீர்வு கூடாது என்று இன்றைக்கு உபதேசிக்கக்கூடிய இந்திய அரசே, எதற்காக நீ இராணுவ உதவி செய்தாய்? எதற்காக நீ இலங்கைக்கு தளவாடங்களை, ரேடார்களைக் கொடுத்தாய்? உண்மை வெளிப்பட்டு, தூங்கிக்கொண்டு இருந்த தமிழகம் விழித்துக் கொண்டுவிட்டதா? உறக்கத்தில் இருந்து தமிழகம் இப்பொழுது விழிக்க ஆரம்பித்து விட்டதா? இவர்கள் உள்ளத்தில் எழுகின்ற, சீறுகின்ற புயல் கொந்தளிப்பாக மாறி விடுமோ? எரிமலையாக வெடிக்குமோ? அதன் விளைவுகள் என்னவாகுமோ? என்ற அச்சத்தின் காரணமாக, ‘இராணுவத்தீர்வு கூடாது; அப்பாவித்தமிழர்கள் மீது தாக்குதல் கூடாது’ என்று நாங்கள் அறிவுரை சொல்லி இருக்கிறோம் என்கிறீர்களே?
ஆனால், டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து பதவி பொறுப்பு ஏற்றவுடன், சந்திரிகா குமாரதுங்கா இங்கேவருகிறார் என்று கேள்விப்பட்டு, அவர் வருவதற்கு முன்பே இப்பொழுது அதிபராக இருக்கின்ற, அப்பொழுது அந்தநாளில் பிரதமராக இருந்த கொலைவெறியன் இரஜபக்சே, ‘எங்கள் ஜனாதிபதி இந்தியாவுக்குப் போகிறார்; இந்தியா - இலங்கை இராணுவக் கூட்டு ஒப்பந்தம் போட ஏற்பாடாகிவிட்டது’ என்று சொன்னதை அறிந்த மாத்திரத்தில் அதிர்ச்சி அடைந்த நான், 2004 ஜூலை 28 ஆம் தேதி அன்று உங்களை நேரில் சந்தித்து, பிரதமரைச் சந்தித்து, ‘இப்படி ஒரு செய்தி வந்து இருக்கிறதே, இது கூடாது கொடுமை’ என்று கூறியபோது, ‘அப்படி ஒரு ஒப்பந்தம் போடுவதாக இல்லை’ என்றார்.
ஆனால், ஒரு மூன்று மாதத்துக்கு உள்ளாக, அக்டோபர்த் திங்களின் இறுதிப் பருவத்தில் இராணுவ ஒப்பந்தம் ஏற்பாடாகி, இரு நாடுகளும் கையெழுத்திடுவதற்குத் தேதி மட்டும்தான் குறிப்பிட வேண்டியது பாக்கி என்று இருஅரசுகளின் சார்பில் கூட்டு அறிக்கை என்ற செய்தி பத்திரிகைகளில் வெளியானவுடன் நான் ஓடோடி வந்தேன். பிரதமர் அவர்களைச் சந்தித்து, கூட்டு அறிக்கை வெளியிட்டு இருக்கிறீர்களே, இராணுவ ஒப்பந்தம் என்கிறீர்களே இது அடுக்குமா? தகுமா? என்று கேட்டு, என்னென்ன காரணங்களுக்காக இதைச் செய்யக்கூடாது என்று நான் கடிதம் கொடுத்தேன்.
தோழர்களே, தேவாலயத்தின்மீது குண்டுவீசப்பட்ட காட்சியைக் கண்டு மனம் பதைத்தீர்கள். நான் பிரதமரிடத்தில் சொன்னேன். நீங்கள் இராணுவக் கூட்டு ஒப்பந்தம் போட முடிவு செய்து இருப்பது வரலாற்றுப் பிழையாகி விடும். 1987 இல் செய்த பிழையை மீண்டும் செய்யாதீர்கள். இராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் என்கின்ற தவறான ஒப்பந்தத்தைப்போல, இன்னும் ஒரு தவறைச் செய்து விடாதீர்கள் என்று சொல்லிவிட்டு, நீங்கள் பலாலி விமானதளத்தைப் பழுதுபார்த்துக் கொடுக்க முடிவு செய்து இருப்பதாகச் செய்தி வந்து இருக்கிறதே, இந்தப் பலாலி விமான தளத்தை ஏன் நீங்கள் பழுது பார்க்கிறீர்கள்?
அங்கிருந்துதானே சிங்களவன் விமானங்களை ஏவினான். அந்த விமானங்கள்தானே தேவாலயங்கள் மீது குண்டு வீசின? அப்படிக் குண்டு வீசியதில்தானே நவாலியில், செயின்ட் பீட்டர் சர்ச்சில் 168 பேர் பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்டார்கள்? அதில் ஒரு பகுதியைத்தானே இந்தக் குறும்படத்தில் பார்த்தீர்கள். அதைப்பார்த்து விட்டுத் தானே தர்ஷிகா புலிப்படையில் போய்ச் சேர்ந்தாள். இந்தக் குண்டுவீசுகின்ற கொடுமையைச் செய்கின்ற பலாலி விமான தளத்தைப் பழுதுபார்க் காதீர்கள்’ என கெஞ்சினேன்.
பலாலி விமானத்தளத்தில் இருந்து தமிழர்களைக் கொல்ல விமானங்களை ஏவுவான் என்று கூறியபோது, பிரதமர் நிச்சயமாகச் செய்ய மாட்டேன் என்றார். அப்பொழுது இராணுவ அமைச்சராக இருந்த மதிப்புக்குரிய பிரணாப்முகர்ஜி அவர்களும் நிச்சயமாகச் செய்யமாட்டோம் என்றார். சயூரா என்ற இலங்கைப் போர்க்கப்பலை இந்திய அரசின் செலவில் பழுது பார்க்கப் போவதாகச் செய்தி வந்தது.
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி கொன்று கொண்டு இருக்கிறான் இலங்கைக் கடற்படைக்காரன்? எங்கள் மீனவர்களைக் கொன்று இருக்கிறான். அவன் கடற்படைப் போர்க்கப்பலை நீங்கள் ஏன் பழுது பார்க்கிறீர்கள்? என்றபோது, ‘அதுவும் செய்யப்போவது இல்லை’ என்றார். தோழர்களே, இந்த வாக்குறுதி களைப்பெற்று நிம்மதியாக நான் வந்தேன். இது நவம்பர் மாதம் 10 ஆம் தேதி.
ஆனால், 2005 ஜூன் 10 ஆம் தேதி கொழும்புக்குச் சென்ற, அப்பொழுது வெளிவிவகார அமைச்சராக இருந்த நட்வர்சிங், ‘இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகாவிட்டாலும் அதன் சரத்துகள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றன’ என்றார். இந்தச்செய்தி வந்த அடுத்த கணமே ஆத்திரப்பட்டு, மறுநாள் மாலை 6 மணிக்குத் தில்லிக்கு ஓடிச்சென்று நான் பிரதமரைச் சந்தித்தேன்.10 ஆம் தேதி கொழும்பில் சொன்ன சேதி அறிந்து, 11 ஆம் தேதி மாலை நான்கரை மணிக்கு பிரதமரை அவரது வீட்டில் சந்தித்தேன். ‘நட்வர்சிங் இப்படி சொல்கிறாரே? என்று கேட்டபோது, ‘இல்லையில்லை, அவர் கூறியது அவரது சொந்தக்கருத்து. அப்படி எல்லாம் ஒன்றுமில்லை’ என்றார்.
நம்பினேன். பிரதமர் அவர்களே, நான் உங்களை நம்பினேன். நீங்கள் சொல்வதை நம்பினேன். ஆனால், 2005 டிசம்பர் 9 ஆம் தேதி, இலங்கையின் விமானப் படைத் தளபதி வைஸ்மார்ஷல் டொனால்டு பெரிரா கொழும்பில் வைத்துச் சொன்னான். ‘பலாலி விமான தளம் ஆறுமாத காலமாக இந்திய விமானப்படை விற்பன்னர்க ளால், அவர்கள் செலவில் பழுதுபார்த்துக் கொடுக்கப்பட்டுவிட்டது’ என்று இலங்கையின் விமானப்படை அதிகாரி சொன்னான்.
இப்பொழுது கேட்கிறேன். நீங்கள் இலங்கையின் விமானப்படைத் தளத்தைப் பழுது பார்த்துக் கொடுத்தீர்கள். எங்கள் வரிப்பணத்தில் நீங்கள் பழுது பார்த்துக் கொடுத்தீர்கள். அங்கிருந்து ஏவிவிடப்பட்ட விமானத்தில்தான், எங்கள் பிள்ளைகளை எங்கள் தாய்மார்களைக் கொன்று இருக்கிறது இலங்கை விமானப்படை.
அதிர்ச்சி அடைந்த நான், திரும்பவும் உங்களிடம் ஓடிவந்தேன். என்னவென்று விசாரிக்கிறேன்? என்று சொன்னீர்கள். 2006 ஜூலை பிறந்தது. எனக்குத் தகவல் கிடைத்தது.
இந்திய விமானப்படையின் ரேடார்களை இலங்கைக்குத் தருகிறார்கள் என்று. நான் 29 ஆம் தேதி பிரதமரை அவரது வீட்டில் சந்தித்தேன். ரேடார்கள் கொடுக்கிறீர்களாமே, இது கொடுமையல்லவா? அந்த ரேடார்களை வைத்து தமிழர்கள் மீது குண்டுவீசிக் கொல்கிறானே? என்றபோது, ‘நாங்கள் தராவிட்டால், பாகிஸ்தான் தருவான். சீனாக்காரன் தருவான்’ என்றார். நான் கேட்டேன். ‘பாகிஸ்தான் வம்சாவளி அங்கு எவனும் இல்லையே? சீனாக்காரன் வம்சாவளி அங்கு எவனும் இல்லையே. எங்கள் தொப்புள் கொடி உறவுள்ள தமிழ் மக்கள் அல்லவா இருக்கிறார்கள். பாகிஸ்தான் காரன் கொல்வான் - சீனாக்காரன் கொல்வான் என அவர்கள் கொல்வதற்குப் பதிலாக நாங்கள் கொல்கிறோம் என்கிறீர்களா? இந்த ரேடார்களைத் திரும்பப் பெறுங்கள் என்று சொன்னேன்.
அந்த ரேடார்கள் தமிழர்களுக்கு எதிராகப் பயன்பட மாட்டாது. அப்படிப் பயன்படுத் தப்பட்டால் உடனடியாக ரேடார்களைத் திரும்பப் பெறுவோம் என்றீர்களே! பிரதமர் அவர்களே இப்பொழுது நீங்கள் தந்த ரேடார்கள், ஆயுதங்கள் இவற்றை வைத்துத்தான் சிங்கள இராணுவம், சிங்கள விமானப்படை, சிங்களக் கப்பல் படை இவ்வளவு தாக்குதலை நடத்தி வந்து இருக்கிறது.
இலங்கையின் கடற்படைக்கு 'Blue Water Surveillance' நீலக்கடல் கண்காணிப்பு எனும் சக்திகிடையாது. அது பெரிய கப்பற் படை வைத்து இருக்கின்ற நாட்டுக்கு மட்டும்தான் உண்டு. இந்தியக் கடற்படைக்குத் தான் உண்டு. இந்தியக் கடற்படையின் அந்த சக்தியைப் பயன்படுத்தின இந்திய இலங்கைக் கடற்படைகள் இந்திய கடற் படையும் இலங்கைக் கடற்படையும் தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தைப்போட்டீர்கள். தகவல் பரிமாற்றம் போட்டதே, இலங்கைக் கடற்படைக்கு போரில் கடல் புலிகளை அழிப்பதற்குதான். நீங்கள் திட்டம் வகுத்துக் கொடுத்தீர்கள். எந்த வழிகளில் போய்த் தாக்கலாம் என்று வழிகாட்டிக் கொடுத்தீர்கள், தகவல் கொடுத்தீர்கள். ஏன், சண்டையை நீங்களே நடத்தினீர்கள். உங்கள் போர்க் கப்பல்களைப் பயன்படுத்தி புலிகளின் 10 கப்பல்களை கடலில் தகர்த்தீர்கள். கோடானகோடி பெறுமான முள்ள அவர்களது ஆயுதத் தளவாடங் களைக் கடலில் தகர்த்தீர்கள்.
நான் இவையெல்லாம் பொறுப்பை உணர்ந்துதான் பேசுகிறேன். ஒரு இந்திய அரசின் இராணுவத்தைப்பற்றி இப்படிப் பேசலாமா? இந்திய அரசின் கப்பல் படையைப் பேசலாமா என்றால், இந்திய அரசின் கப்பல்படையைத் தமிழனை அழிப்பதற்கு இந்திய அரசு பயன்படுத்து கிறபோது, அந்தத் துரோகத்தை செய்கிற போது, எடுத்துச் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை. இதைச் செய்ய வேண்டியது எங்கள் கடமை.
தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் எதற்காகப் போட்டீர்கள்? அதை இரத்து செய்தீர்களா? தமிழர்கள் என்ன ஒன்றும் தெரியாதவர்களா? எங்களை முட்டாள்கள் என்று கருதினீர்களா?
எந்தத் தைரியத்தில் நீங்கள் ரேடார் கொடுத்தீர்கள்? நீங்கள் கொடுத்த ரேடார் எங்களைக் கொல்வதற்குப் பயன்படுகிறது. எங்கள் குழந்தைகள் 61 பேரை செஞ்சோலையில் துடிக்கத் துடிக்கக் கொல்வதற்கு உங்கள் ரேடார்கள் பயன்படுத்தப் பட்டு இருக்கிறது என்று நான் குற்றம் சாட்டுகிறேன். செஞ்சோலைப் படுகொலையில் இந்திய விமானப்படைக்கு பங்கு உண்டு. இந்திய விமானப்படைதான் உதவி செய்து இருக்கிறது.
ஈவுஇரக்கமற்ற இந்திய அரசே, ஒரு அனுதாபம் சொன்னது உண்டா? இந்த 61 குழந்தைகளுக்காக ஒரு கண்டனம் தெரிவித்தது உண்டா?
தேவாலயத்தில் மண்டியிட்டு ஜெபித்துக் கொண்டு இருந்த ஜோசப் பரராஜ சிங்கம் என்கின்ற நாடாளுமன்ற உறுப்பினரை, அவர் மனைவியின் கண்ணெதிரே நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொன்றானே, நீங்கள் கண்டனம் தெரிவித்தது உண்டா?
கொழும்பில் ஐ.நா.மன்றம் திறக்க வேண்டும் என்று நடுவீதியில் வந்து போராடிய, அகிம்சை வழியில் கிளர்ச்சி நடத்திய துரைராஜ நடராஜ என்கின்ற எம்.பி.யை சுட்டுக் கொன்றார்களே, கண்டனம் தெரிவித்தது உண்டா?
இதுவரையிலும் நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சுட்டுக் கொன்றார்களே, கண்டனம் தெரிவித்தது உண்டா?
2006 ஆகÞட் 14 ஆம் தேதி, செஞ்சோலையில் 61 குழந்தைகள் கொல்லப்பட்டார்கள். 8 ஆம் தேதியன்று ஆழிப்பேரலையின் பேரழிவில் இருந்து மக்களைப் பாதுகாக்க பிரெஞ்சு நாட்டுக்காரன் கொண்டுவந்த சேவை நிறுவனத்துக்கு நிவாரணப் பணிக்கு சேவைசெய்யப்போன 17 தமிழ் ஊழியர்களைத் தரையில் படுக்க வைத்து உச்சந்தலையில் சுட்டான். 2 பேர் தப்பி ஓடினார்கள். ஒருவர் இஸ்லாமிய இளைஞன். அவர்களை நூறு கெஜம் ஓடவிட்டு சுட்டுக்கொன்றார்கள்.
இந்தச் செய்தியை மறுத்தது சிங்கள அரசு. ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கண்காணிப்புக் குழு வந்து பார்த்துவிட்டு இந்தப் பதினேழு பேரும் சுனாமி பணியாளர்கள் உச்சந்தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று சொன்ன போது உண்மை வெளியே வந்தது.
அப்படியானால், கடந்த நான்கு ஆண்டுக் காலம் நீங்கள் திட்டமிட்டு, ஈழத்தில் இருக்கின்ற விடுதலைப் புலிகள் அமைப்பை அழிக்கவேண்டும் என்று திட்டமிட்டு, இலங்கை அரசுக்கு இராணுவரீதியாக எல்லா உதவிகளும் செய்கிறீர்கள்.
இப்பொழுது கையும்மெய்யுமாக பிடிபட்டுக் கொண்டீர்கள். கடந்த 9 ஆம் தேதி. நள்ளிரவு நேரத்தில் வன்னிக் காட்டில் இருந்து மின்னலைப்போல் சீறிவந்தன புலிப்படை விமானங்கள். உலகத்தில் இதுவரை எந்தப் புரட்சி இயக்கமும் தாங்களாக சொந்தத்தில் விமானப்படை தயாரித்த வரலாறே கிடையாது. பெருமைப்படுகிறேன், என் தமிழனுக்காகப் பெருமைப்படுகிறேன். பாராண்ட தமிழன் மீண்டும் இந்த பார் வியக்க புவி வியக்க அவன் சாதித்து இருக்கிற சாதனையை எண்ணிப் பெருமைப்படுகிறேன்.
அப்படி அவர்கள் அன்று நடத்திய தாக்குதலில் இந்தியப் பொறியாளர்கள் இரண்டுபேர் சிந்தாமணி ராவுத், ஏ.கே.தாகூர் படுகாயமுற்றார்கள். இவர்களுக்கு அங்கு என்னவேலை?
நீ சிந்தாமணி ராவுத்தையும், ஏ.கே.தாகூரையும் அனுப்பியது மட்டுமல்ல, இந்திய ஹைகமிஷன் பேச்சாளர், என்ன திமிர் இருந்தால் அவன் அங்கே இருந்து சொல்கிறான். 265 இந்திய இராணுவத்தினர், இங்கிருக்கின்ற இராணுவ நடவடிக்கை களுக்கு உதவியாக இருக்கிறார்கள்’ என்று என்ன மமதையில் சொன்னான். அப்படிச் சொன்னது பத்திரிகையில் வந்தது. இணையதளத்தில் வந்தது. இந்தியா மறுத்ததா?
அப்படியானால், அங்கே இருக்கக்கூடியவர்கள் இந்த யுத்தத்தில் அவர்கள் ஈடுபடலாம் என்றால், இவ்வளவும் செய்துவிட்டு, நிலைமை வெளியே வந்தவுடன் 9 ஆம் தேதி இரவு இரண்டரை மணிக்கு சம்பவம், 10 ஆம் தேதி பத்திரிகைகள் செய்தி.
11 ஆம் தேதி காலையில் நான் உங்களுக்குக் கடிதம் அனுப்பினேன். மிகுந்த வேதனையோடு தாங்க முடியாத அதிர்ச்சியில், இப்படி இந்தியர்கள் நேரிடையாக சண்டையில் ஈடுபட்டு இருக்கிறார்களே, இரண்டுபேர் காயப்பட்டு இருக்கிறார்களே, ஈழத்தமிழ் இனத்தை அழிக்கின்ற இனப்படு கொலைக்கு இந்திய அரசு நேரிடையாக உதவுகிறீர்கள், இந்திய இராணுவம் உதவுகிறது. இந்த வேதனையை உங்களிடத்தில் கூறுகிறேன் என்று தெரிவித்ததற்கு நீங்கள் எழுதிய பதில் கடிதத்தில்,
‘உங்கள் கடித வாசகம் என்னைப் புண்படுத்திவிட்டது’ என்று எழுதியிருக் கிறீர்கள்.
உங்களைத் தனிப்பட்ட முறையில் புண்படுத்தும் நோக்கம் எனக்குக் கிடையாது. தனிப்பட்ட முறையில் மதிப்பது என்பது வேறு. ஆனால், எங்கள் இனத்தைக் கரு அறுப்பதற்கு உங்கள் அரசு உங்கள் தலைமையில் செய்கின்ற துரோகத்தை எப்படி எங்களால் சகிக்க முடியும்? எவ்வளவோ பொங்கி வருகின்ற ஆத்திரத்தை எல்லாம் அணை போட்டுத் தடுத்துவிட்டு, மிகப்பொறுமையாகப் பேசிக்கொண்டு இருக்கிறேன்.
ஏனென்றால், கேட்கின்ற மக்கள், இங்கே செய்தியாளர்கள் வந்து இருக்கிறார்கள். இந்த குறுந்தகடு இந்தப் பேச்சு மக்களிடத்தில் போகும்போது, மக்களை கேட்கிறேன். இந்தப் பேச்சு இங்கே அண்ணாமலை மன்றத்தில் மட்டும் அல்ல, அன்னைத் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விருப்பு வெறுப்பற்று, காய்தல் உவத்தல் அகற்றி, என்னரும் தமிழ்மக்களே உங்கள் காலடியில் விழுந்து உங்களுக்கு ஊழியம் செய்கின்ற வைகோ கேட்கிறான்.
இந்திய அரசு செய்கின்ற இந்தத் துரோகத்துக்கு என்ன தண்டனை? நீங்கள் நீதிபதிகள் தமிழ் மக்களே, உங்களுடைய கவனத்திற்கு நாங்கள் நடந்ததை முன் வைக்கிறோம். நாங்கள் எந்தவிதத்திலும் யாரையும் அரசியல் ரீதியாகக் காயப்படுத்த வேண்டும் என்றோ, இதில் அரசியல் ரீதியாக ஏதாவது ஒரு இலாபத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்றோ செயல்படவில்லை.
என்ன தைரியத்தில் நீங்கள் ரேடார்கள் கொடுத்தீர்கள்? ஆயுதம் கொடுத்தீர்கள்? எந்த அடிப்படையில் வட்டியில்லாக் கடன் கொடுத்தீர்கள்? நீங்கள் கடன் கொடுத்தீர்கள் மூன்றாவது நாள் அவன் பாகிÞதான் போய் ஆயுதம் வாங்கினான். நேற்றைக்கு மாÞகோவில் இருந்தான் கொட்டபாயா இராசபக்சே. இன்றைக்கு இஸ்லாமாபாத் போயிருக்கிறான். ஆயுதம் வாங்கப் போயிருக்கிறான்.
செஞ்சோலையில் 61 பிள்ளைகளைக் கொன்ற நாளில்தான், 2006 ஆகÞட் மாதம் 14 ஆம் தேதி அன்றுதான் தோழர்களே, இரண்டு கப்பல் நிறைய பாகிÞதான் ஆயுதங்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வந்தது.
இப்பொழுது நாம் பேசிக்கொண்டு இருக்கின்ற இந்த நேரத்தில் இஸ்லாமாபாத்தில் உட்கார்ந்து பாகிஸ்தான் ஆயுதங்களைக் கொண்டு போகின்ற பேச்சுவார்த்தையில் கொட்டபாயா இராசபக்சே ஈடுபட்டு இருக்கிறான். பாகிஸ்தான் ஆயுதம் தருகிறது - சீனா ஆயுதம் தருகிறது - மாஸ்கோவில் நேற்றைக்கு ஆயுதம் வாங்குகின்ற ஒப்பந்தத்தை முடித்து இருக்கிறான்.
உலகநாடுகள் எல்லாம் எங்கள் மக்களைக் கொல்ல ஆயுதம் தரும். நீயும் சேர்ந்து தருவாய். ஆயுதங்களைத் தந்துவிட்டு, இங்கே இருந்து ரேடார் அனுப்பிவிட்டு ஆயுதம் கொடுத்துவிட்டு, வட்டியில்லாக் கடன் கொடுத்துவிட்டு, கப்பல்படை பரிமாற்றம் தகவல் ஒப்பந்தம் போட்டுவிட்டு, அங்கே இருக்கிறவனுக்கு இங்கேவந்து சுடுவதற்குப் பயிற்சி கொடுத்துவிட்டு, இந்திய மண்ணில் பயிற்சி கொடுத்து விட்டு, இவ்வளவும் செய்து விட்டு, இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க வேண்டும் என உபதேசிக்கிறீர்கள்.
ஆகவே, நாங்கள் இராணுவ உதவி செய்கிறோம் என்று பிரதமர் ஒப்புக் கொண்டிருக்கிறாரே இதைத்தான் தமிழ் மக்களிடம் சொல்ல விரும்புகிறோம்.
இலங்கைக்கு நாங்கள் இராணுவ உதவி செய்து இருக்கிறோம். இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க நாங்கள் ஆயுதம் தந்து இருக்கிறோம் என்கிறார். இது பிரதம அமைச்சரின் கடிதம். எனக்கு எழுதிய கடிதம். அக்டோபர் 2 காந்தி பிறந்த நாளன்று எழுதிய கடிதம். இதில், இலங்கையின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க நீங்கள் ஆயுதம் தந்ததாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
படித்தவர்கள், நடுநிலையாளர்கள் விடுதலைப் புலிகளை ஏற்காதவர்கள், எங்களை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று எங்களை வெறுப்பவர்கள் அவர்களிடம் நான் கேட்கிறேன்.
இலங்கையின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டும்; ஆகையால் நாங்கள் இதற்கு மேல் தலையிட முடியாது. சரி, வாதத்துக்கு ஒப்புக் கொள்கிறேன். அப்படியானால், அவர்களுடைய பிரச்சனை உள்நாட்டுப் பிரச்சனை என்றால், நீங்கள் எதற்காக அதிலே ஆயுதம் கொடுத்தீர்கள்? சிங்கள அரசுக்கு ஆதரவாக அந்த வேலையைச் செய்தீர்கள்? கைகழுவிவிட்டோம், இதில் தலையிடவில்லை என்று சொல்லலாமே, நீங்கள் எதற்காக ஆயுதம் கொடுத்தீர்கள்?
அப்படியானால் சிங்கள அரசின் இராணுவ பலத்தை அதிகரித்து நான்காண்டு காலமாக தமிழர்களை வதைப்பதற்கு நீங்கள் பங்காற்றினீர்கள். தமிழன் சிந்திய ஒவ்வொரு சொட்டு இரத்தத்திற்கும் மன்மோகன் சிங் அரசு பொறுப்பேற்க வேண்டும். ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும் மன்மோகன் சிங் அரசு பொறுப்பேற்க வேண்டும் இதை பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் நான் எழுதியிருக்கிறேன். உங்கள் அரசைக் கூண்டில் நிறுத்துவோம். மன்மோகன்சிங் அவர்களே, உங்கள் அரசைக் கூண்டில் நிறுத்துவோம். உங்கள் அரசில் பங்கு ஏற்கும் எல்லோருக்கும் இந்த இரத்தப்பழியில் பங்கு உண்டு. திடீரென்று ஏற்பட்டது அல்ல. மூன்றரை ஆண்டுக்காலமாக ஏற்பட்ட சம்பவம். பசியால் துடிக்கி றார்களே, நோயால் மடிகிறார்களே, அவர்களுக்கு உதவிப் பொருள்களை அனுப்ப வேண்டும் என்று அண்ணன் நெடுமாறன், தமிழ் மக்கள் திரட்டித்தந்த உணவையும், மருந்தையும் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்க ஏன் மறுத்தீர்கள்? மத்திய அரசு இதற்குப் பதில் சொல்ல வேண்டும். மன்மோகன்சிங் அரசு இதற்குப் பதில் சொல்ல வேண்டும். இப்படி ஒரு நிலைமை ஏற்படாது என்று நினைத்துக்கொண்டு மறுத்தீர்கள்.
எதற்காக வைகோ மத்திய அரசைக் குற்றம் சாட்டுகிறான்?
எதற்காக அவன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கு ஏற்க மறுக்கிறான்?
எதற்காக அவன் மனிதச் சங்கிலிக்குப் போக மறுக்கிறான்?
இந்தக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இங்கு அல்ல பல இடங்களில் எழுப்பப்படுகின்றன. அந்தச் சகோதரர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய அன்புச் சகோதரர்களே, விருப்பு வெறுப்பு இல்லாமல் உங்கள் இதயக்கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு என் விளக்கத்தைக் கேளுங்கள்.
நான்கு ஆண்டுக்காலமாக இந்திய அரசிடம், பிரதமரிடத்தில் நேரில் போய் மன்றாடி மன்றாடிக் கேட்டும், இவ்வளவு ஆயுதங்களை, ரேடார்களை, பணத்தைக் கொடுத்து, துப்புக் கொடுத்து காட்டிக் கொடுத்து, இவ்வளவும் செய்து அவர்களைக் கொல்கின்ற இந்தக் கொடுமையை, துரோகத்தை எப்படி மன்னிக்க முடியும்? எல்லா உயிர்களும் ஒன்றுதான். இன்று நேற்று அல்ல, 1948 முதல் நீங்கள் துரோகம் செய்கிறீர்கள். 1987 இல் துரோகம் செய்தீர்கள்.
1985 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பெட்ரோல் இல்லாமல் ஒரு விமானம் தரை இறங்கியது. பெட்ரோல் போட வேண்டும் என்று கேட்டான். அதிகாரிகள் போய்ப் பார்த்தனர். ‘இந்த விமானத்தில் ஆயுதங்கள் இருக்கின்றன. நாங்கள் பெட்ரோல் போட மாட்டோம்’ என்றனர். தில்லிக்கு வந்திருந்தான் இலங்கையின் உள்துறை அமைச்சர். பிரதமரைப்போய்ப் பார்த்தான். ‘பெட்ரோல் போட்டு அனுப்பு’ என்று அனுப்பிவிட்டார்கள். அது போர்ச்சுகல் நாட்டில் இருந்து வந்த விமானம்.
நான் மார்ச் 13 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் கேட்டேன். நம் பிரதமரைக் கேட்டேன். இலங்கையில் தமிழர்களைக் கொல்வதற்கு சிங்களத்துக்காரனுக்கு நிறைய ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு வந்த விமானத்துக்கு, திருவனந்தபுரத்தில் பெட்ரோல் போடுவதற்கு எப்படி நீங்கள் உத்தரவிடலாம்? என்று கேட்டேன். அப்பொழுது பிரதமர் சொன்னார். ‘வெறும் வெடி மருந்துகள்தான் இருந்தன’ என்றார். ‘அதுவும் தமிழர்களைக் கொல்வதற்குத்தானே?’ என்றேன். அதற்குப் பிரதமர், ‘அப்படி ஒன்றும் அதில் எழுதவில்லை’ என்றார்.
அப்படியானால் ரீகன் பாகிஸ்தானுக்குக் கொடுக்கிறானே? அந்த ஆயுதங்களை பாகிஸ்தானுக்குக் கொடுக்கக் கூடாது என்று கூச்சல் போடுகிறீர்களே, அந்த ரீகனின் ஆயுதங்கள் இந்தியாவைத் தாக்குவதற்கு என்று அதில் எழுதிக் கொடுத்து இருக்கிறானா? என்று கேட்டேன்.
அதன்பிறகு, 1985 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் கவச மோட்டார்கள் ஆயுதங்கள் கொடுக்கப்பட்டன. தென்னாப்பிரிக்காக்காரனோடு எவனும் வியாபாரம் செய்யக்கூடாது, பொருள் வாங்கக்கூடாது, பொருள் கொடுக்கக்கூடாது என்று பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று அனைத்து நாடுகள் மன்றத்தில் இந்தியா கர்ஜித்ததே, அங்கே தென்னாப்பிரிக்காக்காரன் இலங்கைக்கு ஆயுதம் கொடுத்து இருக்கிறானே! விற்று இருக்கிறானே! இதை ஏன் நீங்கள் எதிர்க்கவில்லை சார்க் மாநாட்டில்? என்று கேட்டதற்குப் பதில் சொல்லவில்லை அவர். ‘உங்கள் ஆங்கிலம் எனக்குப் புரியவில்லை என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் அவர். நான் சொல்றது உனக்குப் புரியுதா? இல்லையா? ஏன்யா கொடுத்தே? என்று தமிழில் கேட்டேன்.
உடனே இன்னொருவர் எழுந்தார். இவர் தமிழில் பேசுவது அவருக்குப் புரியவில்லை - அவர் இந்தியில் பேசுவது இவருக்குப் புரியவில்லை’ என்றார். ஏன் என்றால், அவர் இந்தியில் பதில் சொன்னார்.இவ்வளவு ஆயுதம் கொடுத்த பிறகும் அவர்களை அழிக்க முடியவில்லை.
என்றோ பிறந்திருக்கும் தமிழ் ஈழம். அதைக் கெடுத்ததே இந்தியாதானே? இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் நீ தலையிட வில்லை என்றால், உனக்கு என்ன அங்கு வேலை? நீ எதற்காக ஒப்பந்தம் போட்டாய்? 1987 இல் நீ எப்படி ஒப்பந்தம் போட்டாய்? எல்லாவற்றையும் அலசுவோம். எல்லாவற்றையும் சொல்வோம். எந்தப்பக்கம் தப்பு இருக்கிறது என்று மக்கள் தீர்மானிக்கட்டும். ஏன் விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டிக் கொண்டு இருக்கிறாய்?
நீ செய்த துரோகம், நீ செய்த கொடுமைகளை நான் சொல்வேன். எப்படி ஒப்பந்தம் போடலாம்? பிரபாகரனை ஏமாற்றி அழைத்துக் கொண்டு வரவில்லையா? ஏக பிரதிநிதியாக ஏற்றுக் கொண்டு இருக்கிறோம் உன்னைத் தமிழ் ஈழத்துக்கு, எல்லா உதவியும் செய்யத் தயாராக இருக்கிறோம் என்று சொல்லி, முதல்செயலர் பூரி சொன்னார். அவர்தான் இப்பொழுது இணைச் செயலர். அப்படியெல்லாம் சொல்லித்தான் அழைத்துக் கொண்டு வந்தார்கள். விமான நிலையத்தில் பிரபாகரன் கொடுத்த பேட்டி எட்டுக்காலத்தில் வரவில்லை இந்து பத்திரிகையில்?
அவரைக் கொண்டுபோய் தில்லி ஓட்டலில் வைத்தபிறகு, ஒப்பந்தத்தை வாசித்துக் காட்டினார்கள். ஆனால், அதன் ஒரு பிரதியைக் கூட அவரிடம் கொடுக்கவில்லை. இந்த ஒப்பந்தத்தைப் போடப்போகிறோம் என்று நீங்கள் சொல்லவில்லையா? எப்படி நீங்கள் ஒப்பந்தத்தைத் திணிக்கலாம்? சிங்கள அரசோடு, இந்திய அரசு எப்படி ஒப்பந்தம் போடலாம்? அவர்களுக்குள் பிரச்சனை என்று அவர்கள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் ஒப்பந்தத்தைத் திணித்தீர்கள்.
அப்பொழுது என்ன சொன்னார்கள்? ‘ஒரு வல்லரசு எங்கள்மீது திணிக்கிறது. நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம். இந்திய மக்களை நேசிக்கிறோம். சிங்கள இனவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கிவிடும்’ என்று சுதுமலையில், ஆகஸ்ட் 4 ஆம் தேதி பிரபாகரன் சொன்னார். அன்றைக்குப் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு அதில் விருப்பமே கிடையாது. அமெரிக்காவுக்கு மருத்துவ மனைக்கு செல்லப் புறப்பட்டார். அவருடைய பேக்கேஜ் எல்லாம் விமானத்திற்குப் போய்விட்டது. கட்டாயப்படுத்தி விமான நிலையத்திற்குப் போகவிடாமல் தடுத்து அழைத்துக்கொண்டுவந்து கடற்கரையில் நிறுத்தினீர்கள்.
இங்கே இருந்துபோன தமிழன், பிழைக்கப்போன தமிழன் என்று சொன்னீர்கள். அம்மையார் இந்திரா காந்தி அவர்கள்தான் நாடாளுமன்றத்தில் சொன்னார். இதே கருத்தை 1956 இல் பண்டாரநாயகாவே சொன்னார். வடக்கு கிழக்கில் இருக்கிற தமிழர்கள் பூர்வீகத் தமிழர்கள்.
ஒப்பந்தத்தை அவர்கள் மீது திணித்து, ஏன் போர் மூண்டது? அவர்களது புலிப்படை தளபதிகள் கையில் ஆயுதம் ஏந்தாமல் வந்தவர்களை, கடலிலே மறித்துக் கைது செய்தார்கள். இந்திய இராணுவம் கட்டுக்காவல் போட்டுப் பாதுகாக்க முயன்றது.
ஆனால், தில்லியில் இருந்து உங்களை தீட்ஷித் பார்த்தவுடன், அன்றைய பிரதமரை கட்டுக்காவலை விலக்கச் சொன்னார்கள். கட்டுக்காவலை விலக்கினார்கள். சிங்கள இராணுவத்துக்காரன் சயனைடு கத்தியோடு பாய்ந்து போனான். நஞ்சுக்குப்பிகளைக் கடித்து 12 பேர் அந்த இடத்திலேயே இறந்து விழுந்தார்கள் புலிப்படைத் தளபதிகள்.
செப்டெம்பர் 15 ஆம் தேதி - அண்ணா பிறந்த நாளில் இருந்து, திலீபன் உண்ணாவிரதம் இருந்தான். அவர்களுடைய நிலங்கள் எல்லாம் இன்றைக்குச் சிங்களவர்களைக் கொண்டு குடியமர்த்தப்பட்டு வருகின்றன. 1801இல் சிங்களவன் வெறும் 11 பேர் கிழக்கு மாகாணத்தில். இன்றைக்கு 33 சதவிகிதம் பேர் இருக்கிறான் சிங்களத்துக்காரன். தமிழர்களின் பூர்வீகப் பகுதிகளுக்கு உள்ளே வந்து குடியமர்த்தி விட்டான்.
இவற்றையும் கண்டித்து, ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, அகிம்சா வழியில் காந்தி வழியில்தானே உண்ணா விரதம் இருந்தான் திலீபன். பலாலி வரை போன தீட்ஷித், திலீபனைப் பார்த்து இந்தியா சார்பில் உண்ணாவிரதத்தை நிறுத்து என்றாவது சொன்னாரா? இது காந்தி பிறந்த நாடா? திலீபன் அழைப்பது சாவையா? இந்தச் சின்ன வயதில் இது தேவையா? என்று அன்றைக்குக் காசி ஆனந்தன் பேசிய வார்த்தைகளைக் கேட்டு மாரடித்து அழுதார்கள், திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்துக்கு முன்னால்.
செப்டம்பர் 24 ஆம் தேதி பிரபாகரன் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்திக்கு கடிதம் எழுதினார். திலீபன் இறந்தது செப்டம்பர் 26 ஆம் தேதி. ‘இந்திய அரசை நாங்கள் நம்புகிறோம்; சிங்கள அரசின் தவறுகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்’ என்று மன்றாடி ஒரு கடிதம் அனுப்பினாரே, பதில் இல்லையே? அதன்பிறகு, இந்த 12 புலிப்படை தளபதிகள் இறந்ததற்குப்பிறகு, அக்டோபர் 10 ஆம் தேதி அன்று மீண்டும் பிரபாகரன் ஒரு கடிதம் எழுதினார். எங்கள் பத்திரிகை அலுவலகங்கள் ஈழமுரசு, முரசொலி அலுவலகங்களை வெடிகுண்டு வைத்து உங்கள் இராணுவம் தகர்த்து விட்டதே என்று எழுதினாரே? அவர்கள்மீது தாக்குதல் நடத்தியதால், அவர்கள் தற்காப்புக்கு எதிர்த்தாக்குதல் நடத்தினார்கள்.
அக்டோபர் 25 ஆம் தேதி எழுதினார். ‘போரை நிறுத்துங்கள்; எங்களோடு பேசுங்கள்’ என்று. அந்த வார்த்தைகளில் எவ்வளவு கண்ணியம் இருந்தது. ‘எங்களைத் தாக்காதீர்கள் போரை நிறுத்துங்கள்’ என்றார். பதில் இல்லை. தொடர்ந்து 8 கடிதங்களை எழுதினார்கள். 1987 ஆம் ஆண்டில் தொடங்கி, 1988 ஜனவரி 12 மார்ச் 9 ஆம் தேதிவரை கடிதம் எழுதினார். அன்னை டேவிட் உண்ணாவிரதம் இருந்தார். தாக்கினார்கள். அன்னை டேவிட் இறந்தார்.
இந்திய அரசு கட்டுக்காவலை விலக்கியதால் 12 புலிப்படைத் தளபதிகள் இறந்தார்கள். சரி போகட்டும். அதன்பிறகு, பேசுவதற்குத் தூது அனுப்பிய ஜானியை நீங்கள்தானே கொன்றீர்கள்? நீங்கள் அனுப்பி வைத்துவிட்டு, அவர் காட்டுக்கு உள்ளே வருகிறபோது, ‘நான் இந்திய அரசால் அனுப்பப்பட்டவன்’ என்று சொன்னபோது, ஆயுதமற்ற அவனை சல்லடைக்கண்களாகத் துளைத்துக் கொன்றீர்களே, தூதனைக் கொன்ற கொடுமை புராணத்தில்கூடக் கிடையாதே? உலகில் எங்கும் கிடையாதே? நடுக்கடலில் கிட்டுவைக் கொல்வதற்கு எப்படித் துணிந்தீர்கள்? அலைபாயும் பன்னாட்டுக் கடல் எல்லையில், இந்தியக் கப்பல்படையை அனுப்பி, கிட்டு சாவுக்கு நீ காரணமானாய்.
இவ்வளவு துரோகத்தையும் வரிசையாகச் செய்துவிட்டு, இவ்வளவு நிகழ்ச்சிகளும் நடந்தபிறகு, இப்பொழுது நீங்கள், 2004 ஆம் ஆண்டுக்குப்பிறகும் துரோகம் செய்கிறீர்கள். வாஜ்பாய் பிரதமராக இருந்தார். பாரதிய ஜனதா கட்சியின் மதவாதக் கொள்கைகள், இந்துத்துவா கொள்கைகளில் எங்களுக்குத் துளியும் உடன்பாடு கிடையாது. ஆனால், வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்தபோது ஒருதுரும்பைக் கூட இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அவர்கள் போடவில்லை. உண்மையைச் சொல்வேன் நான்.
1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம். நான் அதில் கலந்து கொண்டவன். அந்தக் கூட்டத்தில் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டார். சோனியா காந்தியும் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் நானும் பேசினேன். எடுக்கப்பட்ட முடிவு என்ன? இலங்கைக்கு எந்த ஆயுதமும் கொடுக்கக்கூடாது. அதுமட்டுமல்ல, விற்கக்கூடாது. கூட்டம் முடிந்து வெளியேவந்து செய்தியாளர்கள் கேட்கிறார்கள். இந்தியா ஏதாவது ஒருவிதத்தில் அவர்களுக்கு ஆயுதம் கொடுக்குமா? கொடுக்காது. ஆயுதம் விற்பீர்களா? விற்பனை கிடையாது. இது வாஜ்பாய் சொன்னது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவைமீறி, நீங்கள் எப்படி ரேடார்களும் தளவாடங்களும் கொடுத்தீர்கள்? என்ன அடிப்படையில் கொடுத்தீர்கள்? தமிழ்நாட்டுக்குப் பத்து அமைச்சர்கள் கொடுத்து இருக்கிறோம். என்ன வேண்டுமானலும் கொடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தீர்களா? ஆகவேதான், மூன்று நான்கு ஆண்டுக் காலமாகவே நாங்கள் கேட்டு வந்தோம். இப்பொழுது கடைசியாக, இப்பொழுது நடைபெறும் துரோகங்கள். இதற்கு என்ன முடிவு?
நாங்கள் கேட்கிறோம். கொடுத்த ரேடார்களைத் திரும்ப வாங்கு. கடனை இரத்து செய். கடன் கிடையாது என்று சொல். தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தை இரத்து செய். இப்போது ஒருவாரத்துக்கு முன்பு ஒரு ஒப்பந்தம் போட்டு இருக்கிறார்களே, தகவல் தொடர்பு ஒப்பந்தம் 2013 ஆம் ஆண்டு வரையில் அந்த ஒப்பந்தத்தை இரத்து செய். அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களையும் இரத்து செய்.
இலங்கையின் உள்விவகாரம் - அதில் தலையிட முடியாது. இப்படித்தான் இந்திரா காந்தியிடம் சொன்னார்கள். இந்திரா காந்தி அம்மையார் சொன்னார்: இண்டர்னல் மேட்டர் கிடையாது. சர்வதேச மனிதஉரிமைப் பிரச்சனை டாக்காவில் இருக்கவேண்டிய பங்களா தேசத்துக்காரன், இங்கே வந்து அகதியாக உட்கார்ந்து இருக்கிறான். என் நிலத்தில் இருக்கிறான். அதனால் மானெக்சா தலைமையில் இராணுவத்தை அனுப்புவேன்’ என்றார்கள்.
இங்கே இப்பொழுதே ஒரு இலட்சம் அகதிகள் இருக்கிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள். 3 இலட்சம்பேர் வீடு வாசலை இழந்து இருண்டு கிடக்கின்ற வாழ்வில், ஒவ்வொருநாளும் பாம்புக்கடியில் சாகிறவர்கள் மட்டும் நாற்பது பேர் இலங்கை காட்டில். மருந்து இல்லை, உணவு இல்லை இவ்வளவுபேர் சாவுக்கும் இந்திய அரசின் நடவடிக்கைகள் காரணம் என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.
அது இன்னொரு நாடு;நாங்கள் தலையிட முடியாதே என்றால், செஞ்ச பாவத்துக்கு நீங்கள் பிராயச்சித்தம் தேட வேண்டும் இல்லையா? நீங்கள்தானே இவ்வளவும் கொடுத்தீர்கள்? பட்டினி கிடப்பதற்கு உதவியாக இருந்தீர்கள்? இப்பொழுது மொத்தத் தமிழகமும் கொதித்து எழுந்து விட்டது. ஆறரைக்கோடித் தமிழர்களும் கொதித்து எழுந்து விட்டார்கள்.
ஆகவே, இந்தக் கட்டத்தில் இந்திய ஒருமைப்பாட்டைப் பலியிட்டுவிடாதே. இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற இந்திய ஒருமைப்பாட்டைப் பலியிட்டு விடாதே. உடனடியாக சண்டையை நிறுத்தச் சொல்; புலிகளோடு பேசச்சொல், நீங்கள் யாரிடம் பேசப்போகிறீர்கள்? பேசுவது என்றால் புலிகளோடு பேசுங்கள்.
இனிமேல் கடந்த காலத்தைப்பற்றிப் பேசிப் பயன் இல்லை. இனி கடந்த காலத் துன்பியல் நிகழ்வுகளைப் பேசினால், கடந்த காலத் துரோகங்கள் எல்லாவற்றையும் பேச வேண்டியது வரும். துன்பியல் நிகழ்வுகள் எதையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. நியாயப்படுத்தவில்லை. இப்போது என்ன செய்யப் போகிறாய்? இப்பொழுது இலங்கையில் இருக்கின்ற பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்றால், அவர்களை போரை நிறுத்தச் சொல்லுங்கள். விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குங்கள் இந்தியாவில்.
உலகத்தில் எல்லா நாடுகளிலும் தடைபோடச் சொன்னதே இந்தியா. நான் ஆதாரத்தோடு சொல்கிறேன். உலகத்தில் எல்லா நாடுகளுக்கும்போய், இங்கிலாந்துக்குப் போய், ஐரோப்பிய யூனியனுக்குப்போய் மன்றாடிக் கேட்டு உலகம் முழுவதும் கேடு செய்தது, இந்திய அரசுதான். இப்பொழுது ஆஸ்திரேலியாவைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது, அவன் கேட்க மாட்டேன் என்கிறான். ஆஸ்திரேலிய அரசிடம் இருந்து எனக்குக் கிடைத்த தகவல். இதை எல்லாம் வெளியே சொல்ல மாட்டோம் என்று நினைக்கிறீர்களா?
இவ்வளவும் செய்துவிட்டு சரி, அதெல்லாம் எங்களால் முடியாது என்றால், பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். அது ஒரு சுண்டைக்காய் நாடு. நாங்கள் ஆறரைக்கோடி பேர் மொத்தமாக மூச்சுவிட்டால் பதர் மாதிரிப் பறந்து போய்விடுவான் சிங்களத்துக் காரன். இங்கு இருக்கின்றவர்களுக்கு ஆத்திரம் வராதா? நீ ஆயுதம் கொடுப்பாய்? ரேடார் கொடுப்பாய்? பணம் கொடுப்பாய்? பயிற்சி கொடுப்பாய்? இங்கு ஒரு லிட்டர் டீசல் போய் விடக்கூடாது கடல்வழியாக. சரி என்ன முடிவுக்கு வருவான்? சிங்களவனுக்கு ஆயுதம் கொடுத்து எங்கள் தமிழனைக் கொல்ல வேண்டும் என்றால்,
நீங்கள் சிங்கள அரசுக்கு ஆயுதம் ஏன் கொடுக்க வேண்டும்? தமிழன் ஆயுதத்தை ஏந்துவதற்கு இங்கே இருந்து போவோம் என்று போக மாட்டானா? அப்படிப் போகவேண்டும் என்று சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்? சொல்ல வேண்டிய தேவை வந்தால், வைகோ சொல்வான். தைரியமாகச் சொல்வான், பகிரங்கமாகச் சொல்வான், சொல்லி விட்டு முதல் ஆளாக அங்கே நிற்பான். அந்த நிலைமை வந்தால், போகச் சொன்னால் முதல் ஆளாகப் போவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தயார் தானா நீங்கள்? தயார் - தயார் - தயார் என்று நாடு முழுவதும் கேட்கும். நாடு முழுவதும் இளைஞர்களைத் திரட்ட முடியும் என்னால்.
எச்சரிக்கிறேன் இந்திய அரசை! பொருளாதாரத் தடைவிதித்து, நீ இராஜ்ய அழுத்தம் கொடு, அந்த இராஜ்ய அழுத்தம் வெற்றி பெறாவிட்டால் இராஜ்ய உறவுகளைத் துண்டித்துக் கொள். இதில் என்ன உள்நாட்டு விவகாரம். உலகத்துக்கே நீதான் ஒவ்வொரு நாட்டினுடைய ஒருமைப் பாட்டையும் தீர்மானிக்கிறவனா? பக்கத்தில் இருக்கக்கூடிய பாகிஸ்தானை கிழக்கு பாகிஸ்தானை பங்களாதேக்ஷ் ஆக்கியதே நாம்தான்.
கிழக்கு தைமூரிலே வாக்கெடுப்பு நடத்தினாய். இந்தோனேசியாவை விட்டுப் பிரிய வேண்டுமா என்று 74.2 சதவிகிதம் மக்கள் தனியாகப்போக வேண்டும் என்று ஓட்டுப் போட்டார்கள். தனியாகப் பிரிந்து விட்டது. ஐ.நா.மன்றம் அதைத் தனிநாடாக ஆக்கி விட்டது. செர்பியாவிலிருந்து மான்டிநீரோ பிரிந்துபோக வேண்டுமா என்று வாக்கெடுப்பு நடைபெற்றது. 52 சதவிகிதம் பேர் ஓட்டுப்போட்டார்கள், தனியாகப் போகவேண்டும் என்று, இன்று மான்டிநீரோ தனி நாடாகி விட்டது. என்ன செய்யப்போகிறாய்?
காங்கேசன் துறையில் ஒரு இடைத் தேர்தல் நடத்திய தந்தை செல்வா சிங்களத்துக்காரனுக்குச் சவால் விட்டார். ‘தனித் தமிழ் ஈழம் என்பதை முன்வைத்து நான் போட்டி இடுகிறேன். இலங்கை ஒன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் போட்டியிடுங்கள்’ என்றார்.
அன்றைக்குக் கம்யூனிஸ்ட்டுகளும் அங்கே உள்ள சிங்களக் கட்சிகளோடு சேர்ந்து கொண்டு தேர்தலைச் சந்தித்தார்கள். 78 சதவிகிதம் ஓட்டு பெற்று, தந்தை செல்வா காங்கேசன் துறை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் சொன்னார்: ‘தமிழ் மக்கள் தனி ஈழத்தை விரும்புகிறார்கள்’ என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து, 11 பேரோடு வெளிநடப்புச் செய்தார். 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வந்தது. இதற்கு முன்பு 1976 ஆம்ஆண்டில் வட்டக்கோட்டையில், பண்ணாகத்தில் தமிழர் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம். அந்தக் கூட்டத்தில் மே 14 ஆம் தேதி தீர்மானம். அற்புதமான தீர்மானம்; ‘இனி சகவாழ்வு சாத்தியம் இல்லை. இந்தந்தக் காரணங்களினால் சாத்தியம் இல்லை.
நாங்கள் ஏற்கனவே தனிநாடு அமைத்து வாழ்ந்தவர்கள்; எங்கள் இனம், கலாச்சாரம் அழிக்கப்படுகிறது; கோயில்கள் கொளுத்தப்பட்டன; வழிபாட்டுத் தலங்கள் சூறையாடப் பட்டன; நூலகம் கொளுத்தப்பட்டது; தமிழரின் இலக்கியங்கள் பொசுக்கப் பட்டன; தமிழ்ப் பெண்களை மானபங்கம் செய்தார்கள்; தமிழச்சி கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்தார்கள், சிசுக்களை எடுத்து சயனைடு கத்தியில் போட்டு நிறுத்தினார்கள், மார்பகங்களை அறுத்தார்கள், இரத்தம் ஆறாக ஓடியது.
இவ்வளவு கொடுமைகளும் நடக்கிறபோது, இங்குதான் நமது கலாச்சாரம் கெட்டு குட்டிச்சுவராகி விட்டதே, தமிழனின் மானமும், கலாச்சாரமும், பண்பாடும் பட்டுப் போகாமல் அங்குதான் பாதுகாக்கப் படுகிறது. இவ்வளவு கொடுமைகளையும் கண்டதற்குப்பிறகுதான் அவர்கள் இந்தப் போராட்டக் களத்துக்கு வந்தார்கள்.
இதை எல்லாம் சுட்டிக் காட்டுவதற்கு முன்பு, இந்த ஆயுதப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே, தந்தை செல்வா, ‘தனித் தமிழ் ஈழம், இறையாண்மையுள்ள தமிழ் ஈழ சுதந்திரக் குடியரசு - மதசார்பற்ற குடியரசு அமைப்போம்’ இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார். இது மக்கள் தீர்ப்பு. 1977 நாடாளுமன்றத் தேர்தலில் 92 சதவிகித மக்கள் தனித் தமிழ் ஈழம் என்று ஓட்டுப் போட்டு இருக்கிறார்கள். வடக்கும் கிழக்கும் பூர்வீகப் பகுதி.
இப்பொழுது பிரதமர் கடிதத்தில் சொல்கிறார்: 13 ஆவது சட்டத் திருத்தத்தை அவர்கள் நிறைவேற்று கிறார்கள், கிழக்கில் நிறைவேற்றி விட்டார்கள். 13 ஆவது சட்டத் திருத்தம் என்பது மாய்மாலம். 1987 நவம்பரிலேயே நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம். மத்திய அரசுக்கு மூர்க்கத் தனமான அதிகாரங்களைக் கொடுத்து, தமிழர் தாயகத்தை மறுத்து, மாகாண கவுன்சில்களில் ஏற்படுத்துகின்ற பொம்மை முதலமைச்சர்களை எந்த நேரமும் தூக்கி எறிகின்ற அதிகாரத்தை, கவர்னர்கள் மூலம் ஆட்டிப்படைக்கின்ற அதிகாரத்தை, அங்கே இருக்கக்கூடிய ஜனாதிபதிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு கொடுக்கின்ற 13 ஆவது சட்டத்திருத்தத்தைத் தமிழர்கள் ஏற்கவில்லை.
எம்.கே.நாராயணன் சொன்ன யோசனையைக் கேட்டு பிரதமர் அவர்களே கையெழுத்துப்போட்டு கடிதம் அனுப்பி இருக்கிறார். கிழக்கு மாகாணத்தில் துரோகத்தை உருவாக்கினார்கள் இதில் (RAW) ஆர்.ஏ.டபிள்யூவுக்கும் பங்கு இருக்கிறது. அங்கு ஒரு துரோகியை உருவாக் கினார்கள். தமிழர்கள் வாழ்விலே துரோகம் பல காலங்களில் கேடு செய்து இருக்கிறது. அந்தத் துரோகி கருணாவுக்கு மோசடி பாஸ்போர்ட் தயார் செய்து கொடுத்தவன் கோட்டபாய ராஜபக்சே. இலண்டன் நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்டான். கள்ள பாஸ்போர்ட் தயார் செய்து கொடுத்து அவன் இலண்டனில் இருந்தான். அவனைக் கொண்டுவந்து இப்பொழுது எம்.பி.யாக ஆக்கி இருக்கிறார்கள்.
சகோதரச் சண்டை வேண்டாம் என்கிறார்களே, பிரபாகரனும் கருணாவும் ஒன்றாக இருக்க முடியுமா? என்ன சகோதரச் சண்டை? துரோகியும் - தியாகியும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? பேச்சுக்கு நன்றாக இருக்கலாம். புரட்சி இயக்கங்களில், விடுதலை இயக்கங்களில் துரோகிகளோடு எப்படி இருக்க முடியும்? சகோதரர்களாக இருக்க வேண்டும் என்பது பேச்சுக்கு நன்றாக இருக்கலாம். இருக்கிறவனை எல்லாம் இரண்டாக மூன்றாக ஆக்கிவிட்டு, சகோதரர்களாக இருக்க வேண்டும் என்றால் என்ன அர்த்தம்?
ஆகவே, அவர்களைப் பொறுத்தமட்டில், கிழக்கில் இன்றைக்குத் தற்காலிகமாக பொம்மை அரசை ஏற்படுத்தி இருக்கலாம். வரதராஜப் பெருமாளை உருவாக்கியது மாதிரி, எட்டு சதவிகிதம் சேர்ந்து ஓட்டுப்போட்டு போலிஸ், இராணுவத்தை வைத்து ஓட்டுப் போட்டு நீ தேர்தல் நடத்தி இருக்கலாம். கிழக்கு மீண்டும் கைக்கு வரும். வடக்கு கைப்பற்றப்பட்டபிறகு கிழக்கு வரும்.
என்ன இவ்வளவு தைரியமாகச் சொல்கிறாய்? வரட்டும் உள்ளே சிங்கள இராணுவம் மொத்தமாக சமாதி வைப்பார்கள். மீண்டும் வரலாறு திரும்பும். ரக்ஷ்யாவுக்கு உள்ளே லெனின் கிராடுக்கு உள்ளே, ஸ்டாலின் கிராடுக்கு உள்ளே போய்க்கொண்டே இருந்தது ஹிட்லரின் படை, உள்ளே நுழைந்தாகி விட்டது. யாரும் எதிர்ப்பே இல்லை. போய்க்கொண்டே இருந்தான். கடைசியாக மொத்தமாக கல்லறை கட்டினார்கள். அதைப்போல சிங்கள இராணுவத்துக்காரனிடம் பல நாட்டு ஆயுதம் நிறைய இருக்கிறது. நம் ஆளிடம் ஆயுதம் வாங்க பணம் இல்லை. டீசலே போகாதே இங்கிருந்து.
ஆக, மொத்தமாக தர்ஷிகா சொன்னதைப்போல, மொத்த ஆயுதமும் உள்ளே வரட்டும். இந்தியா ஆயுதம் - பாகிஸ்தான் ஆயுதம் - சீனா ஆயுதம் - ரக்ஷ்யா ஆயுதம் என எல்லா ஆயுதமும் உள்ளே வரட்டும். அவர்கள் மொத்தமாக அடிப்பார்கள். நாம் அதற்குத் துணையாக இருப்போம்.
நான் இந்தக் கூட்டத்தின் வாயிலாகக் கேட்கிறேன். ஐ.நா.சபை அலுவல கத்தைத் திறக்கக் கூடாது என்றானே! கொழும்புக்காரன் அனுமதி மறுத்ததை இந்தியா கண்டித்ததா? ஐ.நா.சபை என்ன ம.தி.மு.க. கிளைக் கழகமா? விடுதலைப் புலிகள் அமைப்பின் கிளையா? ஐ.நா.சபை அலுவலகத்தைத் திறக்க அனுமதி தரவில்லை. மனித உரிமைகள் கமிஷன் தலைவர் மேடம் லூயிஸ் ஹார்பார் என்கின்ற அம்மையாரை தமிழர் பகுதிகளுக்குப் போக அனுமதிக்க வில்லை.
எல்லாவற்றையும்விட, ஐ.நா.மன்றத்தில் சுவிட்சர்லாந்தும், நியூசிலாந்தும் சேர்ந்து ஒரு தீர்மானம் கொண்டு வந்தன. இலங்கையில் மனிதஉரிமை மீறல்கள் நடக்கின்றன என்று. அதை எதிர்த்தது இரண்டே நாடு. ஒன்று இலங்கை, இன்னொன்று இந்தியா. தீர்மானத்தை எதிர்த்தவர்கள் இந்த இருவர்தான். மனித உரிமைமீறல் இருப்பதையே ஒப்புக்கொள்ளாத நாடு. இந்த நிலைமையில் அங்கே இருக்கக்கூடிய அந்த மக்களுக்குத் தொண்டு நிறுவனங்களை எல்லாம் வெளியே போகச்சொன்னது எதற்கு கிளிநொச்சி பகுதியில்? அங்கே இருக்கின்ற மக்களைக் கொன்று குவிக்க வேண்டும் என்றுதான்.
ஆகவே, இந்திய அரசு இலங்கை அரசுக்கு சொல்லவேண்டும். உடனடியாக இராணுவத் தாக்குதலை நிறுத்து. புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்வா என்று. போர் நிறுத்தம் அவர்கள் எப்படிச் செய்ய முடியும் என்று சிலபேர் கேட்கலாம். இதற்குமுன்பு போர்நிறுத்தம் செய்தவர்கள் முதலில் அரசு அல்ல, விடுதலைப்புலிகள்தான். காட்டுநாயகா விமானதளத்தைச் சூறையாடி விட்டு, யானைஇறவில் வெற்றி பெற்றுவிட்டு, போர்முனையில் தங்கள் பலத்தைக் காட்டிவிட்டு, அவர்களாக 2001 கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பத்து நாட்களுக்குப் போர்நிறுத்தம் செய்து, அது மேலும் 30 நாட்களுக்கு நீடித்து, சர்வதேச சமுதாயத்தின் பார்வை திரும்பி, அதற்குப்பிறகு வேறுவழி இல்லாமல் சிங்களவன் போர் நிறுத்தத்துக்கு வந்தான். பேச்சு வார்த்தை நடந்தது. அதனைக் கெடுத்தது சந்திரிகா அரசு.
இப்பொழுது அதைவிடக் கொடியவன் இராஜபக்சே, அவன் ஆட்சிக்கு வந்தவுடன் சொன்னான் தமிழர்களுக்குப் பூர்வீகத்தாயகம் என்பது ஒருக்காலமும் கிடையாது. நான் இந்திய அரசைக் கேட்கிறேன். தமிழர்களின் பூர்வீகத் தாயகத்தை ஏற்றுக் கொள்ளாதவனோடு எப்படிப் பேச்சுவார்த்தை நடத்தி, ஒன்றுபட்ட இலங்கையில் இருக்க முடியும்? இது சிங்களவர் நாடு என்கிறான். அது சிங்களவர் நாடா? தமிழர் நாடா? என்பதை சீக்கிரத்தில் உலகம் தெரிந்து கொள்ளும்.
நாங்கள் முழு அளவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்போம். எல்லாவிதத்திலும் ஆதரவு கொடுப்போம். ஆகையினால் இந்தக் கடல் பிரித்திருக்கிறதே? எவ்வளவு காலத்திற்குப் பிரித்து விடும்?
இன்றைக்கு ஏற்பட்டு இருக்கக்கூடிய இந்தச் சூழலில், தமிழக மக்கள் மத்தியில் நாங்கள் சொல்வதெல்லாம், இந்திய அரசு செய்த துரோகத்தை நாம் கண்டிக்க வேண்டும். இந்தத் துரோகத்தைச் செய்த மன்மோகன் சிங் அரசு, எந்தத் தைரியத்தில் இதைச் செய்தது? தமிழ்நாட்டு மக்களை எப்படி வேண்டு மானாலும் ஏமாற்றிக் கொள்ளலாம் என்றா?
ஆக, தமிழக மக்களே, இனிமேல் இந்த நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி! தில்லியில் எவர் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி. யார் தலைமையில் ஆட்சி நடந்தாலும் சரி, தமிழர்களுக்குத் துரோகம் செய்தால் அந்த அரசைத் தூக்கி எறிவதற்கு தமிழர்கள் முன்வருவார்கள். இது முதல்கட்டம். அடுத்த கட்டம் அங்குள்ள ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற நினைத்து, இங்கு உள்ள ஒருமைப் பாட்டைப் பறிகொடுத்துவிடக்கூடாது; அப்படியொரு நிலைமை ஏற்பட்டுவிடக் கூடாது.
இந்த களக்காட்சிகளில் பார்த்தீர்களே, தங்கள் உயிர்களைத் தந்தார்களே, அப்படிச் செல்கின்ற அவர்கள் போர்க்களத்துக்குப் போகிறபோது, அவர்கள் ஒவ்வொருவரும் தான் செத்தால் தன்னுடைய ஆயுதத்தை இன்னொருவனுக்குக் கொடுக்க வேண்டும் என்று, “ஓ! மரணித்த வீரனே, உன் சீருடைகளை எனக்குத் தா, உன் காலணிகளை எனக்குத் தா, உன் ஆயுதங்களை எனக்குத் தா” என்று அந்தக் குரல் பரவுகிற அதே இடத்தில் சாகப்போகின்ற ஒரு வீரன் அவன் சொல்கிறான்: ‘நான் செத்ததற்குப்பிறகு என்னை புதைத்து விடுங்கள், என் எலும்புகளை எடுத்துக்கொண்டு எதிர்காலத்தில் கைகளில் ஆயுதம் இல்லாவிட்டால் போராடலாம்’ என்று சொல்லக்கூடிய உணர்வு படைத்த மக்கள் அங்கே உள்ளனர்.
சிங்கள இராணுவ விமானங்கள் தூள் தூளாகட்டும்; சிங்கள இராணுவத்தின் டேங்கிகள் உள்ளே போய்ப் பொடிப் பொடியாகச் சிதறட்டும், நொறுங்கட்டும்; புலிகளின் படை அணிகள் வெற்றி பெறட்டும்.சிங்கள இராணுவம் தகர்ந்து தரைமட்டமாகட்டும். இந்தக் குரல் எங்கும் ஒலிக்கட்டும். தாய்த்தமிழகம் ஈழத் தமிழர்களுக்குத் தோள்கொடுக்க எழட்டும். உங்கள் கண்ணீரைத் துடைப்பதற்கு நாங்கள் வருகிறோம். உங்கள் கவலையைப் போக்குவதற்கு நாங்கள் வருகிறோம்.

துரோகம் செய்த இந்திய அரசுக்கு - மன்மோகன் சிங் அரசுக்கு - அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு - தமிழக மக்களே, தக்க தண்டனை கொடுங்கள்! இது என் தாழ்மையான வேண்டுகோள். தமிழ் ஈழம் மலரும், அதுவே எங்கள் தாகம்.
வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.