ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Tuesday, March 10, 2009

புதுச்சேரி பிரெஞ்சு தூதரகத்தில் வைகோ-நெடுமாறன் மனு

புதுச்சேரி: இலங்கையில் போரை நிறுத்த பிரான்ஸ் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் புதுவையில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தில் மனு அளித்தனர்.

தூதரக அதிகாரி ஜாலி ராயட்டை சந்தித்து மனு அளித்ததோடு இலங்கையில் நடைபெறும் சம்பவங்கள் குறித்தும் விளக்கினர்.

பின்னர் வைகோ நிருபர்களிடம் பேசுகையில்,

இலங்கை தீவில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். குழந்தைகள், பெண்கள் உள்பட இந்த நிமிடம் வரை இலங்கை அரசின் ராணுவம் பீரங்கியாலும், விமானம் மூலமும் குண்டுவீசி தமிழர்களை கொன்று குவிக்கிறது.

மருத்தவமனையில் இருப்பவர்கள் கூட கொலை செய்யப்படுகிறார்கள். எனவே உடனடியாக போரை நிறுத்த பிரெஞ்சு அரசாங்கம் ஐ.நா.சபை மூலமும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலமும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐரோப்பா கண்டத்தில் ஈழத் தமிழர்களுக்கு அதிக அளவில் அடைக்கலம் தந்தது பிரெஞ்சு அரசுதான். புதுவை மக்களோடும், மண்ணோடும் கொண்ட உறவின் அடிப்படையில் பிரெஞ்சு அரசாங்கம் போர் நிறுத்தத்துக்கு முயற்சி எடுக்க வேண்டும்.

ஐ.நா.சபையில் இலங்கை பிரச்சினை தொடர்பாக விவாதத்துக்கு இருமுறை முயன்றோம். அதை ரஷியா தடுத்துவிட்டது. இதற்கு இந்திய அரசு தான் காரணம்.

இப்போது போர் நிறுத்தத்திற்காக பிரெஞ்சு தூதரிடம் வலியுறுத்தி இலங்கையின் வரலாற்றை அவரிடம் எடுத்துக் கூறினோம். தமிழர்கள் அங்கு ஆட்சி நடத்தி வந்தார்கள். பின்னர் சிங்களர்களிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டார்கள். இதன் பிறகே தனி நாடு என்று செல்வா தலைமையில் போராட்டம் தொடங்கியது.

போர் நிறுத்தத்தையும் விடுதலை புலிகள்தான் அறிவித்தனர். ஆனால் இலங்கை அரசுதான் அதை முறித்தது. இப்போதும் போர் நிறுத்தத்துக்கு விடுதலைப் புலிகள் தயாராக உள்ளனர். ஆனால் விடுதலைப் புலிகள் எக்காரணம் கொண்டும் ஆயுதத்தை கீழே போட மாட்டார்கள். இது போர் நிறுத்தத்திற்கான முறையும் அல்ல.

எனவே பிரெஞ்சு அரசாங்கம் உடனடியாக இதில் தலையிட வேண்டும் என கூறினோம். பிரெஞ்சு தூதரக அதிகாரி தங்கள் அரசிடம் இதனை எடுத்து கூறுவதாக கூறியுள்ளார் என்றார் வைகோ.

பழ.நெடுமாறன் கூறுகையில்,

இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்டே படுகொலை செய்யப்படுகிறார்கள். இதனை ஐ.நா.சபையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலமும், பிரெஞ்சு அரசின் மூலமும் எழுப்பி இலங்கையில் அமைதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம் என்றார்.

பிரெஞ்சு அதிகாரியிடம் மனு அளித்தபோது அப்போது பாமக புதுவை எம்.பி. பேராசிரியர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. ரவிக்குமார், புதுவை பா.ம.க. எம்.எல். ஏ. அனந்தராமன், இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல். ஏ. நாரா.கலைநாதன், புதுவை மாநில பாஜக தலைவர் விஸ்வேஸ்வரன் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் தங்க.கலைமாறன், பெரியார் திராவிடர் கழக தலைவர் லோகு. அய்யப்பன், செந்தமிழர் இயக்கம் தமிழ்மணி, மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர் செல்வன், மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.