ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Wednesday, March 4, 2009

இந்தியாவுக்கு தெரியாமல் சீனாவிடம் ஆயுதம் வாங்கும் இலங்கை: நெடுமாறன்

தூத்துக்குடி: இந்தியாவுக்குத் தெரியாமல், சீனாவிடம் இலங்கை ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது என்று இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தூத்துக்குடியில் நேற்று இரவு பொதுகூட்டம் நடந்தது. இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஓருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை வகித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், தற்போது இலங்கை அரசுக்கு இந்தியா கொடுத்துள்ள ஆயுதங்களால் தான் இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவுக்கு தெரியாமல் இலங்கை அரசு சீனாவிடமும், பாகிஸ்தானிலும் ஆயுதங்களை வாங்கி குவித்து வருகிறது. புலிகள் மீது உள்ள ஆத்திரம் டில்லியில் உள்ளவர்கள் மதியை இது மறைக்கின்றது.

புலிகள் இந்தியாவிற்கு எதிரான எந்த ஒரு நாட்டிடமும் இருந்து ஆயுதங்கள் வாங்கியது இல்லை. 10 கோடி உலக தமிழர்களும், இலங்கை தமிழர்களுக்கும், விடுதலை புலிகளுக்கும் அரணாக இருப்பார்கள் என்றார்.

வக்கீல்களுக்கு ராமதாஸ் பாராட்டு

பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், இலங்கை பிரச்சனைக்காக வக்கீல்கள் போராடி வருவது பாராட்டுக்குரியது.

தூத்துக்குடியில் பாமக மாநில பொது செயலாளர் உச்சல்சிங் வீ்ட்டிற்கு நேற்று முன்தினம் இரவு சென்ற போலீசார் அங்கு அந்துமீறி நுழைந்து சோதனை போட்டுள்ளனர். ஏன், எதற்கு என்று கேட்டபோது இங்கு பயங்கரவாதிகள் உள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு சோதனையிட உத்தரவிட்டது யார், காவல்துறையினர் இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என எச்சரிக்கிறேன் என்றார்.

பெருமைக்குரிய தமிழினம் - வைகோ

கூட்டத்தில் வைகோ பேசுகையில், சிங்கள ராணுவத்துக்கு பல நாட்டு ஆயுத பலம் உள்ளது. இலங்கை ராணுவ முகாம்கள் பல தமிழர்களை சித்திரவதை செய்யும் கூடங்களாக செயல்பட்டு வருகின்றன.

நாங்கள் பேசுவதை உளவு சொல்லும் போலீசாரும் தமிழர்கள். நேதாஜி, நான் மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறக்க வேண்டும் என்று கூறிய பெருமைக்குரிய இனம் தமிழினம் என்றார்.

இந்திய நிலையில் மாற்றம் - ராமதாஸ் வரவேற்பு

முன்னதாக நேற்று காலை தூத்துக்குடிக்கு வந்த டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இலங்கையில் நடப்பது இன அழிப்பு போர் என்பதை உலக நாடுகள் ஒப்புக் கொண்டு உள்ளன. ஆனால் இந்தியா மட்டும் தயக்கம் காட்டி வருகிறது.

தற்போது இந்தியா கொஞ்சம் தயக்கத்தை கைவிட்டு போர் நிறுத்தம் பற்றி பேசத்தொடங்கி உள்ளது. இது வரவேற்கத்தக்க மாற்றம் ஆகும். இந்த மாற்றம் பேச்சளவில் நின்றுவிடாமல் செயல் அளவில் இருக்க வேண்டும்.

இலங்கை அரசு போரை நிறுத்தா விட்டால் இந்தியா அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும். உடனடியாக முல்லைத்தீவுக்கு உணவை அனுப்ப வேண்டும். விமானம் மூலம் தினமும் உணவு போட வேண்டும்.

போர் நிறுத்தத்துக்கு இலங்கை அரசு முன்வராத நிலையில் சர்வதேச அளவில் இலங்கையை ஒரு குற்றவாளி நாடாக நிறுத்த இந்தியா முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப்பட்டு உள்ளனர். இது கண்டனத்துக்கு உரியது. அதே நேரத்தில் இந்தியா செல்லவில்லை என்பதற்காக, இலங்கை தனது விளையாட்டு வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியது. இந்த தாக்குதல் நடந்த உடன் வெளியுறவுத்துறை மந்திரி எதிர்க்கட்சி தலைவர் அத்வானியை சந்தித்து பேசுகிறார். அறிக்கைகள் வெளியிடுகின்றனர்.

ஆனால் இலங்கையில் மனித படுகொலை நடந்து வருகிறது. இது குறித்து இந்தியா கவலைப்பட்டதாக தெரியவில்லை. இந்தியா இதுவரை கவலையை மட்டும் தெரிவித்து உள்ளது. இதுவரை மத்தியில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படவில்லை.

இப்போதும் காலம் கடந்து விடவில்லை. மத்திய உள்துறை மந்திரி சிதம்பரம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள தமிழகத்தை சேர்ந்த தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ், போன்ற கட்சிகள், பா.ஜனதா, இடதுசாரிகள் மற்றும் வடஇந்திய கட்சிகள் இணைந்த ஒரு கூட்டத்தை கூட்ட வேண்டும்.

தமிழக முதல்-அமைச்சர் தலைமையில் பிரதமரிடம் கொடுத்த மனுவில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றார்.

லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு 2 நாட்களில் தெரியும் என்றும், அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் ராஜா கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு அது அவரது விருப்பம் என்றும் ராமதாஸ் பதிலளித்தார்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.