ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Sunday, March 8, 2009

உலக நாடுகள் கைவிட்ட எங்களை நீங்களாவது காப்பாற்றுங்கள்: புலம்பெயர் மற்றும் தமிழக மக்களிடம் வேண்டுகோள்

வன்னி மக்களுக்கு அவசர உணவு மற்றும் மருத்துவ உதவி கோரி 'வன்னி மக்கள் நலன் பேணும்' அமைப்பு அவசர வேண்டுகோளை புலம்பெயர் மற்றும் தமிழக மக்களிடம் விடுத்துள்ளது.
இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளனில் இயங்கும் வன்னி மக்கள் நலன் பேணும் அமைப்பின் சார்பில் அதன் தலைவர் பி.கனகலிங்கம் கடந்த வியாழக்கிழமை அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"21 ஆம் நூற்றாண்டில் இப்படியொரு கொடூர மனிதப் படுகொலைகளா என மனித சமூகம் வெட்கித் தலைகுனியக்கூடிய அளவில் சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்பு இருக்கின்றது.

இது குறித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தீவிர எதிர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் இது தொடர்பாக அனைத்துலக நாடுகளோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ பாராமுகமாக இருக்கின்றது என்பதால் 'வன்னி மக்கள் நலன் பேணும் அமைப்பு' தங்களுக்கு அவசரமான வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.

கடந்த இரு மாதங்களாக சிறிலங்கா அரச படைகளால் 2,500-க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டும் 4,000-க்கும் அதிகமான மக்கள் காயமடைந்தும் உள்ளனர். இது ஒரு அப்பட்டமான இன அழிப்பு என்ற போதும் ஐக்கிய நாடுகள் சபை கொள்ளாமை ஐக்கிய நாடுகள் சபை மீது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

நாங்கள் உணவு, மருந்து மற்றும் உறையுள் என அடிப்படை வசதிகள் அற்று மனித வாழ்வியலுக்கு பொருந்தாத வாழ்வை வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.

சிறிலங்கா அரசாங்கத்தின் தொடர்ச்சியான தமிழின அழிப்புப் போர் காரணமாக வன்னியில் வாழும் சுமார் நான்கு லட்சத்திற்கும் அதிகமான மக்களாகிய நாங்கள் உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி மாபெரும் மனித பேரவலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

இது குறித்து நாங்கள் அனைத்துலக சமூகத்திற்கு முறையிட்ட போதும் இது தொடர்பாக எங்களுக்கு எதுவித உதவிகளும் கிடைக்கவில்லை என்பது எங்களுக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் அளிப்பதாக உள்ளது.

இந்நிலை நீடித்தால் எமது மக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டும் பட்டினிச் சாவை எதிர்கொள்ளவும் நேரிடும். இவ்வாறான சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்புக்கள் எங்களுக்கு துணையிருக்கும் என எண்ணினோம். ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை எங்களை கைவிட்டுவிட்டதாகவே நாங்கள் கருதுகின்றோம்.

இந்த வேளையில் வன்னி மக்களின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும். எமது மக்கள் பலவழிகளிலும் சிறிலங்கா அரசால் கொல்லப்பபடுவதை உலகம் மௌனமாக அனுமதிப்பது போல் உணர்கின்றோம்.

இவ்வாறான சூழ்நிலையை முறியடிக்கக்கூடிய வல்லமையை புலம்பெயர் வாழ் எம் தமிழ் உறவுகளுக்கு இருப்பதாகவே உறுதியாக நாங்கள் நம்புகின்றோம்.

தற்போது வன்னியில் உணவு மருந்து கையிருப்பு முற்றாகத் தீர்ந்து போய் உள்ளது. இதுவரை 11 பேர் பட்டினிச் சாவை அடைந்துள்ளனர். இத்தொகை மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் தோன்றியுள்ளது.

இவ்வாறான பேரவலத்தை சந்தித்து நிற்கும் மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வளங்களை உடனடியாக அனுப்பி வைப்பதன் மூலம் எமது மக்களின் உயிர்காப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டி நிற்கின்றோம்." என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வன்னி மக்களை அனைத்துலக நாடுகள் கைவிட்டு விட்டன": 'ஈழநாதம்' நாளேடு சாடல்
---------------------------------------------------------------------------------

"வன்னிப்பெரு நிலப்பரப்பில் வாழ்ந்து வரும் தமிழர்களை அனைத்துலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண அமைப்புக்கள் உட்பட பெரும்பாலான அரச சார்பற்ற நிறுவனங்களும் கைவிட்டு விட்டன" என்று வன்னியில் இருந்து வெளிவரும் 'ஈழநாதம்' நாளேடு சாடியுள்ளது.
இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை (07.03.09) வெளிவந்த 'ஈழநாதம்' ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"அனைத்துலக சமூகம் தமிழ் மக்களுக்கு - குறிப்பாக வன்னியில் யுத்தப்பகுதியில் பெரும் அவலத்தின் மத்தியில் வாழும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கத்தவறி விட்டது என்றே கூறுதல் வேண்டும்.

ஒரு வகையில் பார்க்க போனால் வன்னி மக்கள் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறுதல் பொருத்தப்பாடானதாகும்.

சிறிலங்கா அரசு வன்னியில் உள்ள மக்களுக்கான உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கப்பெறுவதைத் திட்டமிட்டுத் தடை செய்தது என்பதில் கேள்விக்கு இடமில்லை.

இதற்கென அது ஒரு புறத்தில் வன்னிக்கான விநியோகங்கள் குறிப்பாக அரச மற்றும் தனியார் (வர்த்தகர்கள்) மூலமான விநியோகங்களை படிப்படியாக குறைத்து வந்ததோடு தடையும் செய்தது.

அடுத்ததாக, வன்னியில் பணியாற்றி வந்த அரச சார்பற்ற நிறுவனங்களை வன்னியில் இருந்து வெளியேற்றியதன் மூலம் வன்னி மக்களுக்கான நிவாரணப் பணிகளை முடக்கியது.

அரசின் பணிப்புக்களைப் புறந்தள்ளி பணியாற்றிய அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது அரசு படைகள் தாக்குதல்கள் நடாத்தி அவற்றின் செயற்பாடுகளையும் முடக்கியதோடு நிவாரணப் பொருட்களை அழிவிற்கும் உள்ளாக்கின.

சிறிலங்கா அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கையானது வன்னி மக்களின் வாழ்க்கையை பெரும் நெருக்கடிக்குள்ளாக்கும் என்பது சகல அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் ஐ.நா போன்ற அனைத்துலக அமைப்புக்களாலும் புரியப்பட்டே இருந்தன. ஆனால், இவ்விடயத்தில் இவ் அமைப்புக்கள் போதிய அக்கறை கொண்டிருந்தனவா? என்பது கேள்விக்குரியதே

இதனை ஒருவகையில் பார்க்கப்போனால் வன்னியில் ஏற்பட்டுள்ள மனித அவலத்தைப் போக்க அவை முற்படவில்லை என்றே கூறலாம்.

இதற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் உண்மைக்குப் புறம்பான யதார்த்தத்திற்கு மாறான பிரச்சாரத்தையும் வாக்குறுதிகளையும் அவை நம்பியமை காரணமாக இருக்கலாம்.

குறிப்பாக கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் நாளுக்கு முன்னராகவே அன்றி சில நாட்களுக்கு பின்னதாகவோ யுத்தம் முடிவிற்கு வந்துவிடும் என சிறிலங்கா அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டு வந்தது.

ஆகையினால் யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் அதாவது, விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வவுனியா கொண்டு செல்லப்படும் வன்னி மக்களுக்கு அங்குள்ள தடுப்பு முகாம்களில் வைத்து நிவாரணம் வழங்க அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் தம்மை தயார்படுத்திக்கொண்டால் போதும் என்பதே அவர்களின் அறிவுறுத்தலாக அமைந்தது.

இதனை ஐ.நா. நிவாரண அமைப்புக்கள் உட்பட பெரும்பாலான அரச சார்பற்ற நிறுவனங்களும் கூட நம்பின. இதன் காரணமாக அவை வவுனியாவில் நிவாரணப் பணிகள், வன்னி மக்களை அவர்களின் சொந்ந இடங்களில் இருந்து வெளியேற ஒத்துழைத்தல் போன்ற விடயங்களில் அவர்கள் காட்டிய அக்கறை அளவிற்கு வன்னியில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி அவை சிந்திக்கவில்லை.

இதன் விளைவே மக்களுக்கான மனிதாபிமான பணியாற்றுவதில் அவை தோல்வி கண்டவையாயின. இது ஒரு வகையில் அவை தமது நேக்கத்தில் இருந்து தவறின, அன்றி ஏமாற்றப்பட்டன என்றே கூறுதல் வேண்டும்.

அவ்வாறு இல்லாதுவிடின் சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து வன்னி மக்களுக்கான மனிதாபிமான தேவைகளை வழங்காது புறந்தள்ளின என்றே அர்த்தப்படும்." என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.