ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Wednesday, March 18, 2009

இந்தியாவின் தவறான அணுகுமுறை மற்றும் நடத்தைகள் -அமெரிக்கா வின் மேலாண்மை

அமெரிக்காவை நோக்கி திசைதிரும்பும் தமிழ்மக்களின் கோரிக்கைகள் -பருத்தியன்


உலகத் தமிழ்மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு சர்வதேசத்தினை நோக்கி போராட்டங்களை முன்னெடுத்துவரும் இந்நிலையில், அவர்களுடைய பார்வை தற்பொழுது அமெரிக்காவை நோக்கித் திரும்புவதை உணரமுடிகிறது.


இதுவரை காலமும், இந்தியாவை பிரதானமாக வைத்து எழுப்பப்பட்ட குரல்களும் ஐரோப்பிய நாடுகளை நோக்கியதான கோரிக்கைகளும் இன்றைவரைக்கும் எதுவித பலனையும் தராத நிலையில்,உலகின் நீதிபதி என தன்னை காட்டிக்கொள்ளும் அமெரிக்காவை நோக்கி தமது நீதிக்கான கோரிக்கைகளை உலகத்தமிழ்மக்கள் முன்வைக்க முனைந்துள்ளனர்.


இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் முக்கிய பங்கு வகிக்கவேண்டிய இந்தியாவே ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள இனவழிப்புப் போருக்கு சகல வழிகளும் துணைநிற்கின்றது.


இந்திய மத்திய காங்கிரஸ் அரசிடம் தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்களனைவரும் ஒருசேர வேண்டுகோள் விடுத்தும் கெஞ்சி மன்றாடியும் அது தமிழ்மக்கள் மீது இரக்கங் காட்டவேயில்லை.போரை நிறுத்தி வன்னி மக்களை காப்பாற்றுவதற்கான அடிப்படை மனிதாபிமான காரியத்தையேனும் செய்யவில்லை என்பது தமிழ் மக்கள் அனைவருக்கும் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்ததுடன் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.


ஐரோப்பிய நாடுகளும் தம்பங்கிற்கு ஒருசில அறிக்கைகளை மாத்திரம் தெரிவித்துவிட்டு பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. சிறிலங்கா அரசின் போர்வெறியை கட்டுப்படுத்தக்கூடிய எந்தவொரு காத்திரமான நடவடிக்கையையும் இந்நாடுகள் மேற்கொள்ளவில்லை என்பது கவலைக்குரிய விடயம்.


இந்நிலையில், இவற்றை நம்பி எந்தவொரு பலனும் கிடைக்காது என முடிவெடுத்தனரோ... என்னவோ..!? தற்பொழுது அமெரிக்காவை நோக்கி, அதாவது ... இலங்கைத் தமிழர் பிரச்சனையை ஓரளவேனும் புரிந்துவைத்துள்ள அமெரிக்க ஐனாதிபதி ஒபமா மற்றும் கிளாரி கிளிண்டன் அம்மையார் ஆகியோரை நோக்கி தமிழ்மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கத்தொடங்கியுள்ளனர்.


இந்நிலையில், இலங்கையின் இனப்பிரச்சனைத் தீர்வு விடயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு இனிவரும் காலங்களில் எப்படியிருக்கும் எனப் பார்ப்போமானால்... ஒபமா அரசினைப் பொறுத்தவரையில், அதன் முதற்கடமையாக, தனது நாட்டின் வீழ்ந்துபோயுள்ள பொருளாதாரத்தினை மீளகட்டியெழுப்புவதனையே பிரதானமாக கருத்தில் கொண்டுள்ளது.


அதற்கு அடுத்தபடிதான் மற்றைய விடயங்கள் என்பது தெளிவு. ஆயினும் இலங்கை விடயத்தில் அது காத்திருந்தது இக்காரணத்தினால் மட்டுமன்று. இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்தியாவின் செயற்பாடுகள் எப்படியிருக்கின்றன, அவ்விடயத்தினை அது எவ்வாறு கையாள்கிறது, இந்திய அரசின் செயற்பாடுகள் குறித்து தமிழ்மக்களின் அபிப்பிராயங்கள் என்ன? என்பவைபற்றி மிகநுணுக்கமாக அவதானித்து வந்தது.


இந்தியாவும் தமிழ்மக்களை கைவிட்டநிலையில், அமெரிக்கா தற்போது தான் தலையிடுவதற்கான சந்தர்ப்பமாக இதைக் கருதலாம். இந்திய நாடாளுமன்ற தேர்தலின்பின் ஆட்சிமாற்றம் வந்து, அதன்மூலம் பாரதிய ஐனதா கட்சி அரசேறினால் அக்கட்சி ஈழத்தமிழ்மக்கள் விடயத்தினை வித்தியாசமான முறையில் கையாள எத்தனிக்கும் என்பதனையும் அமெரிக்கா நன்கறியும் என்பதனால், அதற்கு முன்பாகவே தான் தலையிட்டு தன் அதிகாரத்தினைக் காட்டிக்கொள்ள அமெரிக்கா முயற்சிக்கலாம்.


எது எப்படியாகினும், தற்போது இலங்கை விடயங்களைக் கையாளும் பொறுப்பை கிளாரி கிளிண்டன் அம்மையாரிடமே அமெ.ஐனாதிபதி ஒபமா அவர்கள் ஒப்படைத்திருக்கிறார்.


"ஒரு இலட்சியத்திற்காக, ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் ஒரு இயக்கத்தினை 'பயங்கரவாதிகள்' என கருதமுடியாது. பயங்கரவாதத்தினையும் ஒரு இலட்சியத்துடனான விடுதலைப் போராட்டத்தையும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டும்" என முன்னொருதடவை கிளாரி கிளிண்டன் அம்மையார் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி நல்லவிதமாக கருத்துத் தெரிவித்திருந்தார்.


இவ்வகையில், ஈழத்தமிழர் தொடர்பாக ஆதரவுக்கொள்கையுடைய ஒபமா அரசினை நோக்கி உலகத்தமிழர் அனைவரினதும் கோரிக்கைகள் திரும்பியுள்ள நிலையில்... அதனை நோக்கி தமிழ் மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் மிகவும் வலுவானதாகவும், நிரந்தரத் தீர்வினை பெற்றுத்தர கூடியதுமானதாகவும் இருக்கவேண்டியது மிகவும் அவசியம்.அவற்றில் முக்கியமானவை, வன்னி மக்களின் அவலத்தினை நீக்கும் பொருட்டு உடனடியான யுத்த நிறுத்தம், தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பயங்கரவாதிகள் என்ற பெயரிலுள்ள தடையை உடனடியாக நீக்கி விடுதலைப் புலிகளே நம் தமிழினத்தின் ஏகபிரதிநிதிகள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.


நிரந்தரத் தீர்வாக நம்மை நாமே ஆளும் சுயநிர்ணய உரிமையுடைய தமிழீழம் எனும் தனிநாட்டுத் தீர்வே அமையவேண்டும். என்பவற்றை ஆணித்தரமாக வலியுறுத்தல் வேண்டும். அமெரிக்காவை நோக்கி வலியுறுத்தப்படும் இக்கோரிக்கைகள் முழு உலகத்தையும் வலியுறுத்துவதாகவும் அமையும்.


அக்கோரிக்கைகளை ஏற்று அமெரிக்கா ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா? என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் "தமிழீழம்" மிகவிரைவில் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகும்.


உலகத்தமிழர் அனைவரும் ஒன்றுசேர்ந்து அமெரிக்காவை கேட்கும் அதேசமயத்தில் அமெரிக்க பாராளுமன்ற அங்கத்தவர்கள் பலரும், பொது அமைப்புக்கள் பலவும் ஈழத்தமிழருக்காக பேசத்தொடங்கியுள்ளனர் என்பது நல்லதொரு ஆரம்பம் என்றே சொல்லலாம்.


ஈழத்தமிழர் பிரச்சினையை அமெரிக்கா தனித்தன்மையுடனும் நீதியுடனும் கையாளுமா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தாலும் அதனை உறுதிப்படுத்துவது நம் கைகளிலேயே உள்ளது. எனவே , தற்பொழுது அமெரிக்கா நோக்கி திரும்பியுள்ள நமது நீதிக்கோரிக்கைப் போராட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.


ஆனாலும் நமது போராட்டம் அமெரிக்காவை மட்டுமே சுற்றி நில்லாமல் சர்வதேசம் முழுவதையும் நோக்கியதாகவும் தொடர்ந்து வைத்திருங்கள். ஏனெனில், நம் தமிழர் தரணியாம் தமிழீழம் சர்வதேச நாடுகள் அனைத்தினதும் ஆதரவுடனும் அங்கீகாரத்துடனும் அமையவேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.


வலுப்பெறுவோம் நாம் உருப்பெறுவோம்!
"நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்
நம் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்"

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.