ஈழத்தமிழருக்காக வைகோ. (நண்பர்களே இந்த வலைபூ வைகோ விற்காக என்றிருந்தாலும் கட்சி இயக்க பேதமில்லாமல் ஈழம் சம்பந்தப்பட்ட எல்லா செய்திகளையும் தருகிறது அதுவே தலைவர் வைகோ வின் விருப்பமும் .)Visit www.mdmkonline.com

Monday, March 9, 2009

ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்கு அ.தி.மு.க. அதரவு: ஜெயலலிதா

இலங்கையில் சிங்களவர்களுக்குச் சமமாகத் தமிழர்கள் அனைத்துத் துறையிலும் சம உரிமையுடன் வாழ வேண்டும். அதற்கு இலங்கையில் சுயநிர்ணய அதிகாரம் (சுயாட்சி) பெற்ற தமிழர் நாடு அமைய வேண்டும். இதற்காக இலங்கைத் தமிழர்கள் நடத்தும் போராட்டத்தை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்கின்றது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று இலங்கைத் தமிழர் ஆதரவு உண்ணாநிலை போராட்ட மேடையில் அறிவித்துள்ளார்.
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், அதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறிய, இந்திய அரசையும், திராவிட முன்னேற்றக் கழக அரசையும் கண்டித்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நேற்று திங்கட்கிழமை சென்னை மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாநிலை போராட்டங்கள் நடைபெற்றன.

சென்னையில் நடைபெற்ற உண்ணாநிலை போராட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொண்டார். உண்ணாநிலை மேடையில் ஜெயலலிதா உரையாற்றினார். அப்போது, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாட்டை விளக்கினார்.


இலங்கைத் தமிழர் பிரச்சனையில் என்னுடைய நிலைப்பாடு எல்லோருக்கும் தெரிந்ததுதான். இலங்கைத் தமிழர்கள் அங்குள்ள சிங்களவர்களுக்கு நிகராக நடத்தப்பட வேண்டும். இதற்கான தமிழர்களின் உரிமைக் குரலை நாங்கள் மதிக்கிறோம், அங்கீகரிக்கின்றோம்.

எல்லோரும் சமம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சிங்களவர்களும், தமிழர்களும் சம உரிமையும், சம வாய்ப்பும் பெற்று வாழ வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கின்றோம்.

இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய போராட்டத்தை (சுயாட்சி) நாங்கள் ஆதரிக்கிறோம். அந்நாட்டில் அரசியல் சட்ட அமைப்புக்கு உட்பட்ட வகையில், சுயநிர்ணய அதிகாரம் பெற்ற தமிழர் நாடு அமைய வேண்டும். இதற்காக இலங்கைத் தமிழர்கள் நடத்துகின்ற போராட்டத்தை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்கின்றது.

அதே நேரத்தில் இதற்காக திசை மாறிப்போய் விட்ட ஆயுதம் ஏந்திய போராட்டத்தை நாங்கள் எதிர்க்கின்றோம். இலங்கையில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சண்டையில் ஒன்றும் அறியாத பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். உணவு, உடை, மருந்து எதுவும் இன்றியும், தங்குவதற்கு கூட இடமின்றியும் அப்பாவித் தமிழர்கள் தவித்துக்கொண்டிருக்கின்றனர். பெண்களும், குழந்தைகளும் தான் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.





இந்த அவல நிலை பல மாதங்களாக அங்கே நீடித்துக் கொண்டிருக்கிறது. இப்படி துயரத்தில் சிக்கிக் கொண்டிருக்கிற மக்களை காக்க வேண்டும் என்பதிலும், அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதிலும் மத்திய அரசின் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கோ, மாநிலத்தில் ஆட்சி செய்கிறவர்களுக்கோ எள்ளளவாவது அக்கறை இருக்க வேண்டும். ஆனால், இரண்டு அரசுகளுக்குமே அக்கறை இல்லை. அல்லற்படும் படும் தமிழர்களைக் காக்கவும், அவர்களுக்கு உதவவும், நடவடிக்கை எடுப்பதில், இரண்டு அரசுகளுமே தோல்வியடைந்திருக்கின்றன.

இன்று நாம் உண்ணாநிலை போராட்டம் நடத்துவதனால், பசியால் வாடும், மருந்தின்றி வாடும் இலங்கைத் தமிழர்களின் வாயிறு நிரம்பப் போவதில்லை, நோயிலிருந்து அவர்களுக்கு வாழ்வு கிடைக்கப்போவதில்லை. எனினும், இதுவொரு அறப்போராட்டம், நமது கவலையை, நமது கண்டனத்தை தெரிவிக்கின்ற அடையாளம்.

இலங்கையில் நடைபெறும் துயர நிகழ்வுகள் குறித்து, தமிழக மக்கள் மிகவும் கவலையடைந்திருக்கின்றனர் என்பதையும், கடமை தவறிய மத்திய அரசு மற்றும் மாநில அரசு மீது மக்கள் வருத்தமும் கோபமும் அடைந்திருக்கின்றனர் என்பதையும் எடுத்துக்காட்டுகின்ற அடையாளப் போராட்டம் என்று ஜெயலலிதா தெரிவித்தார்.






தொடர்ந்து உரையாற்றிய அவர், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் போரில் ஈடுபட்டுள்ள சிங்களப் படையினருக்கு இந்தியா பல்வேறு வகையில் உதவி வருவதாகக் குற்றம் சாட்டினார். ஆயுத உதவி வழங்குகின்றது, பயிற்சி அளிக்கின்றனர், தொழில்நுட்ப உதவியாளர்கள் அனுப்பபட்டிருக்கின்றனர் எனவெல்லாம் வெளியான செய்திகள் இதுவரை அதிகாரப்பூர்வமான மறுக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய ஜெயலலிதா, இந்த மௌனத்தின் மூலம் இந்த செய்திகள் எல்லாம் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன என்றும் தெரிவித்தார்.

மத்திய அரசில் முக்கிய பங்கு வகிக்கும், திராவிட முன்னேற்றக் கழகமோ அதன் முதலமைச்சரோ இத்தகைய உதவிக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்று ஜெயலலிதா பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

உண்ணாநிலை போராட்டத்தினை வாழ்த்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஸ்ணசாமி மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் உரையாற்றினர்.

காலை 9:00 மணி தொடக்கம் மாலை 5:00 மணி வரை உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. ஜெயலலிதாவுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பொதுச் செயலாளர் வைகோ பழரசம் கொடுத்து உண்ணாநிலை போராட்டத்தினை முடித்து வைத்தார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Followers

News Archive

About Me

My photo
முடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.